தசரா திருவிழா: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் இன்று கொடியேற்றம்

கொடியேற்றத்தை முன்னிட்டு, முத்தாரம்மன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.
தசரா திருவிழா: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் இன்று  கொடியேற்றம்
Published on: 

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் இன்று அதிகாலையில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி நேற்று கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். முத்தாரம்மனுக்கு காளி பூஜை நடந்தது.

காளி பூஜை

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு நேற்று காளி பூஜை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, கணபதிஹோமம் நடந்தது. காலையில் விநாயகர் பூஜை, சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. 108 சங்கு பூஜை, 108 கலச பூஜையை தொடர்ந்து முத்தாரம்மனுக்கு காளி பூஜை நடைபெற்றது.

அம்மனுக்கு காப்பு

இதில் காளி வேடம் அணிவதற்காக விரதமிருக்கும் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். மதியம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரத்தை தொடர்ந்து அன்னபூஜை நடைபெற்றது.

மாலையில் சுவாமி-அம்மனுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை, சிறப்பு புஷ்பாஞ்சலி நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு மகா அலங்கார காளி பூஜை தீபாராதனை நடைபெற்றது. இரவில் அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டது. விழாவையொட்டி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.

இன்று கொடியேற்றம்

இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் கொடிப்பட்டம் வீதி உலா சென்று கோவிலுக்கு வந்த பின்னர் 5 மணியளவில் கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. பின்னர் கொடிமர பீடத்துக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து விரதமிருக்கும் பக்தர்களுக்கு காப்பு அணிவிக்கப்படுகிறது.

விழா நாட்களில் தினமும் இரவு 10 மணியளவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். 10-ம் திருநாளான வருகிற 20-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 12 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com