

திருமலை,
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற 8-ந்தேதி காலை 7 மணியில் இருந்து 9 மணி வரை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தீபாவளி ஆஸ்தானம் நடக்க உள்ளது.
தீபாவளி ஆஸ்தானத்தின் ஒரு பகுதியாக மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் சர்வ பூபால வாகனத்தில் எழுந்தருளி கோவிலில் உள்ள தங்க வாசலில் கருடாழ்வாரை நோக்கியபடி எழுந்தருள்கிறார்கள். அவருடன் சேனாதிபதியான விஸ்வக்சேனர், மலையப்ப சுவாமிக்கு இடதுபுறம் மற்றொரு பீடத்தில் தெற்கு திசையை நோக்கியபடி எழுந்தருள்வார்.
அதைத்தொடர்ந்து அர்ச்சகர்களால் மூலவர் ஏழுமலையானுக்கு சிறப்புப் பூஜைகள், தீபாராதனை மற்றும் பிரசாதங்கள் சமர்ப்பிக்கப்பட்டு தீபாவளி ஆஸ்தானம் நடத்தப்படுகிறது.
8-ந்தேதி மாலை 5 மணிக்கு மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் 'சகஸ்ர தீபாலங்கார சேவையில்' பங்கேற்பார்கள். தொடர்ந்து கோவிலில் நான்கு மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
தீபாவளி ஆஸ்தானத்தை முன்னிட்டு 8-ந்தேதி நடக்க இருந்த கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை மற்றும் ஆர்ஜித பிரம்மோற்சவம் ஆகிய சேவைகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
இத்தகவலை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.