

திருப்பதி, நவ.22-
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர் ஒருவர் 121 கிலோ தங்க நகைகளை காணிக்கையாக வழங்க உள்ளார்.
இவ்வளவு பெரிய காணிக்கையை வழங்க உள்ள அந்த பக்தர், திருமலை திருப்பதி தேவஸ்தானத்துடன் இதுதொடர்பான ஆலோசனைகளை நடத்தி முடித்து விட்டார். 26-ந்தேதி, கோவிலில் வைத்து தேவஸ்தான அதிகாரிகளிடம் நகைகளை ஒப்படைக்கிறார். 9 தொகுப்புகளாக 45 நகைகளை அவர் வழங்குகிறார். அவற்றின் சந்தை மதிப்பு ரூ.150 கோடி முதல் ரூ.160 கோடி வரை இருக்கும் என்று ஆந்திர அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
நகைகளை காணிக்கையாக வழங்கும் நிகழ்வில் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தனிநபர் கொடுத்த காணிக்கைகளில் இதுதான் மிகப்பெரியது என்றும் தேவஸ்தான வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஆந்திர அரசின் 'P4' திட்டத்தைத் தொடங்கி வைக்கும் நிகழ்வில், சந்திரபாபு நாயுடு பேசியபோது, அந்த பக்தர் மற்றும் அவர் வழங்க முன்வந்துள்ள நன்கொடை குறித்து பொதுவெளியில் குறிப்பிட்டார்.
முதல்-மந்திரி வெளியிட்ட தகவலின்படி, அந்த பக்தர், அமெரிக்காவிற்குச் செல்வதற்கு முன்பு, தனது முயற்சிகளில் வெற்றி பெற வேண்டி ஏழுமலையானிடம் பிரார்த்தனை செய்திருந்தார். பின்னர், அவர் ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தைத் தொடங்கி, வெற்றிகரமான தொழில்முனைவோராக உயர்ந்துள்ளார். அந்த பக்தர் தனது நிறுவனத்தின் 60 சதவீத பங்குகளை விற்றதன் மூலம் 6,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. இந்த விற்பனைக்குப் பிறகு, தனது செல்வத்தின் ஒரு பகுதியை சமூக நலப் பணிகளுக்காகச் செலவிடவும், இறைவனுக்கான நேர்த்திக்கடனை நிறைவேற்றவும் அவர் முடிவு செய்தார். முதல்-மந்திரிருக்கு எழுதிய கடிதத்தில், தனது அடையாளத்தை ரகசியமாக வைத்திருக்குமாறு அந்த நன்கொடையாளர் கேட்டுக்கொண்டதாகத் தெரிகிறது.