கோடை விடுமுறை முடிந்த நிலையிலும் கூட்டம் அதிகரிப்பு... ராமேஸ்வரம் கோவிலில் குவிந்த பக்தர்கள்

பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிவிட்டு கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளிலும் நீண்ட வரிசையில் நின்று புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள்
ராமேஸ்வரம் கோவிலில் தரிசனம் செய்ய காத்திருந்த பக்தர்கள்
Published on

ராமேஸ்வரம்,

அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். விடுமுறை நாட்கள், திருவிழா காலங்களில் பக்தர்களின் வருகை மேலும் அதிகரிக்கும்.

அவ்வகையில் கடந்த 1 மாத காலமாக கோடை விடுமுறை என்பதால் ராமேஸ்வரம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. தற்போது கோடை விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ள நிலையிலும் பக்தர்கள் வருகை அதிகமாக உள்ளது. குறிப்பாக விடுமுறை நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) கோவிலில் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாகவே இருந்தது.

2 மணி நேரம் காத்திருப்பு

ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிவிட்டு கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளிலும் நீண்ட வரிசையில் நின்று புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். கோவிலில் சுவாமியை தரிசனம் செய்ய ரூ.100, 200 சிறப்பு தரிசன கட்டண பாதை மற்றும் இலவச தரிசன பாதை வழியாக அனுமதிக்கப்பட்டனர். இலவச தரிசன பாதையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பக்தர்கள் வரிசையில் நின்று சாமியை தரிசனம் செய்தனர்.

விடுமுறை நாளான இன்று கோவில் ரத வீதி, கடற்கரை, சன்னதி தெரு உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் நடமாட்டம் அதிகமாகவே இருந்தது. ராமேஸ்வரம் ராமர் பாதம், கோதண்ட ராமர் கோவில் தனுஷ்கோடி உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை ஓரளவு இருந்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com