

மனிதன் இறந்த பின்னர் அவரது ஆன்மா எத்தனை நாட்கள் அவரது வீட்டைச் சுற்றியே இருக்கும் என்பது குறித்து கருட புராணம் சில தகவல்களை கூறுகிறது.
இந்த உலகில் ஜீவராசிகளாக பிறந்த ஒவ்வொருவரும் என்றாவது ஒருநாள் மரணித்தே தீர வேண்டும் என்பது நியதி. மரணத்திற்குப் பின்னர் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் இறைவனுடன் தொடர்புடையது. ஒருவரின் மரணத்திற்குப் பிறகு அவர் உடலில் இருந்து பிரிந்த ஆன்மாவின் பயணம் தொடங்குகிறது.
ஒருவரின் மரணத்திற்கு பிறகு அவரது ஆன்மா உடனடியாக வீட்டை விட்டு நிரந்தரமாக வெளியேறுவதில்லை. உடல் அழிந்தாலும் அந்த ஆன்மாவானது, குடும்பத்தினர் மற்றும் வீட்டின் மீதான பற்றுதலால் சில நாட்கள் அங்கேயே சுற்றி இருக்கும்.
ஒருவர் இறந்தவுடன் எம தூதர்கள் அவரது ஆன்மாவை பிடித்து எமலோகத்திற்கு அழைத்துச் செல்வார்கள். அங்கே ஆன்மாவின் பாவ புண்ணிய கணக்குகள் சித்திரகுப்தனால் சரி பார்க்கப்படும்.
இந்த முதல் பயணம் மிகக் குறுகிய காலமே நீடிக்கும். கணக்குகளை பார்த்த பிறகு எம தூதர்கள் ஆன்மாவை மீண்டும் அவரது சொந்த வீட்டிற்கு கொண்டுவந்து விட்டு விடுவார்கள். இந்த நிகழ்வு மரணம் சம்பவித்த முதல் 24 மணி நேரத்திற்குள் நடந்து முடிந்து விடும்.
வீட்டிற்கு திரும்பும் ஆன்மா தன் உடலை எரித்த சாம்பல் அல்லது புதைத்த இடத்தின் அருகிலும், தான் வாழ்ந்த வீட்டைச் சுற்றியும் உலவி வரும். இந்த நாட்களில் ஆன்மாவிற்கு மிகச்சிறிய அளவிலான உடலே, அதாவது சூட்சும சரீரம் மட்டுமே இருக்கும். குடும்பத்தினர் செய்யும் பிண்ட தானம் மற்றும் கிரியைகள் அந்த ஆன்மாவிற்கு உணவாகவும், அடுத்த கட்ட பயணத்திற்கு ஆற்றலாகவும் மாறும். இந்த நிகழ்வு மரணம் சம்பவித்த 10 நாட்கள் வரை நடைபெறும்.
மரணம் சம்பவித்த 11 மற்றும் 12-ஆம் நாட்களில் செய்யப்படும் சிறப்பு சடங்குகள், தானங்கள் மற்றும் பிற காரியங்கள் மூலம் ஆன்மா தனது பசியை ஆற்றிக்கொண்டு பூலோகப் பற்றுக்களை கொஞ்சம் கொஞ்சமாக விடத்தொடங்கும். இது ஆன்மா எமலோக பயணத்திற்கு தயாராக இருப்பதைக் குறிக்கும். இந்த காலகட்டத்தில் நாம் செய்யும் பூஜைகள் மற்றும் மாலையில் ஏற்றப்படும் விளக்குகளின் வெளிச்சத்தின் துணைகொண்டு ஆன்மா எமலோக பயணத்திற்கு தன்னை தயார்படுத்திக் கொள்ளும்.
கருட புராணத்தின் படி மரணத்திற்குப் பிறகு 13-வது நாளில் தான் ஆன்மா வீட்டை விட்டு நிரந்தரமாக வெளியேறும். வீட்டை விட்டு மட்டுமல்லாமல் இந்த பூலோகத்தை விட்டும் நிரந்தரமாக விலகிச் செல்லும். 13 ஆம் நாள் செய்யப்படும் சடங்கிற்கு பிறகு யம தூதர்கள் ஆன்மாவை எம லோகத்தை நோக்கி அழைத்துச் செல்லத் தொடங்குவார்கள்.
இந்த பயணம் சுமார் 47 நாட்கள் அல்லது சில மத நூல்களின்படி ஒரு வருடம் நீடித்து ஆன்மா தன் அடுத்த நிலையை அடையும்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், மரணம் அடைந்த முதல் நாளில் எமலோகம் சென்று திரும்பும் ஆன்மா, 13 நாட்கள் வரை தன் வீட்டிலேயே தங்கியிருக்கும்.
இதனால் தான் 13 நாட்கள் வரை வீட்டில் தீட்டு காக்கப்பட்டு, சடங்குகள் முழுமையாக செய்யப்படுகின்றன. மரணம் நிகழ்ந்த வீட்டில் 13 நாட்கள் வீட்டில் தூய்மை பேணப்பட வேண்டும். அதிகாலை எழுந்து குளிக்க வேண்டும். இரவில் அழுவதை தவிர்க்க வேண்டும். இறந்தவரை மீண்டும் மீண்டும் அழைக்கக்கூடாது. அவ்வாறு செய்வது இறந்தவரின் ஆன்மாவிற்கு துன்பத்தை ஏற்படுத்தலாம்.