ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களில் கம்பம் அகற்றும் விழா

ஊர்வலத்தின்போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கம்பங்களுக்கு பின்னால் நடந்து சென்றனர். மேள தாளங்களுக்கு ஏற்ப பக்தர்கள் ஆடிக்கொண்டு சென்றனர்.
கம்பம் ஊர்வலம்
கம்பம் ஊர்வலம்
Published on

ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் மற்றும் அதன் வகையறா கோவில்களான சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில்களின் குண்டம் மற்றும் தேர்த் திருவிழா கடந்த மாதம் 17-ஆம் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து முக்கிய நிகழ்வுகளான குண்டம் விழா, தேரோட்டம் நடந்து முடிந்த நிலையில், மூன்று கோவில்களிலும் நடப்பட்ட கம்பம் பிடுங்கப்பட்டு, காரை வாய்க்காலில் விடும் நிகழ்வு நேற்று விமரிசையாக நடைபெற்றது.

நேற்று பிற்பகல் 3 மணிக்கு பெரிய மாரியம்மன் கோவிலில் முதலில் கம்பம் அகற்றும் நிகழ்வு தொடங்கியது. அகற்றப்பட்ட கம்பத்தை கோவில் பூசாரிகள் தோளில் சுமந்து கொண்டு மணிக்கூண்டு நோக்கி ஊர்வலமாக சென்றனர். அதேபோல் காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில் மற்றும் சின்ன மாரியம்மன் கோவில்களில் இருந்தும் கம்பங்கள் எடுக்கப்பட்டு மணிக்கூண்டு பகுதிக்கு எடுத்து வரப்பட்டன.

கம்பங்களை சுமந்தபடி சுற்றி சுற்றி ஆடிய பூசாரிகள்
கம்பங்களை சுமந்தபடி சுற்றி சுற்றி ஆடிய பூசாரிகள்

அங்கு பூசாரிகள் 3 கம்பங்களையும் சுமந்து கொண்டு சுற்றி சுற்றி ஆடியபோது பக்தர்கள் பரவசம் அடைந்து பக்தி கோஷம் எழுப்பினார்கள். மணிக்கூண்டில் இருந்து 3 கம்பங்களும் ஊர்வலமாக ஈஸ்வரன் கோவிலை அடைந்தன.

பின்னர் காமராஜ் வீதி வழியாக ஊர்வலம் மீனாட்சி சுந்தரனார் சாலை (பிரப் ரோடு) வந்தது. அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா வந்ததும் 3 கம்பங்களையும் சுமந்து வந்தவர்கள் சுற்றி, சுற்றி ஆடி பரவசம் ஏற்படுத்தினர். ஊர்வலம் மேட்டூர் ரோடு, சுவஸ்திக் கார்னர், சத்தி ரோடு, எல்லைமாரியம்மன் கோவில் வழியாக மீண்டும் மணிக்கூண்டு வந்து சேர்ந்தது.

அங்கிருந்து பெரியார் வீதி, மண்டபம் வீதி, அக்ரஹாரம் வீதி வழியாக காரைவாய்க்கால் சென்று அங்கு காலிங்கராயன் வாய்க்காலில் கம்பங்கள் விடப்பட்டன. மாலை 3 மணிக்கு தொடங்கிய இந்த ஊர்வலம் இரவு வரை நடந்தது.

ஊர்வலத்தின்போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கம்பங்களுக்கு பின்னால் நடந்து சென்றனர். மேள தாளங்களுக்கு ஏற்ப பக்தர்கள் ஆடிக்கொண்டு சென்றனர். பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் கம்பங்கள் மீது உப்பு மிளகு வீசினர். பக்தர்கள் வீசிய உப்பு தார் சாலைகளையே வெள்ளையாக மாற்றியது. வழி நெடுகிலும் சாலையில் தண்ணீர் ஊற்றி பக்தர்கள் கம்பங்களை வரவேற்றனர்.

இதுதவிர விநாயகர், முருகன், சிவன், பார்வதி என சாமி வேடங்கள் மற்றும் அரக்க வேடங்கள் அணிந்த பக்தர்களும் ஊர்வலமாக சென்றனர்.

கோவில்களில் கம்பம் பிடுங்க தொடங்கும் முன்பே ஆங்காங்கே பக்தர்கள் மஞ்சள் கரைத்து ஒருவர் ஒருவர் மீது மஞ்சள் தண்ணீர் ஊற்றி விளையாட தொடங்கினார்கள். காரை வாய்க்கால், கச்சேரி வீதி, மண்டபம் வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, நாச்சியப்பா வீதி, கோட்டை பகுதி, அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா என மாநகரப்பகுதிகள் முழுவதும் பொது மக்கள் உற்சாகமாக மஞ்சள் நீராட்டு விழாவை கொண்டாடினர்.

சாலைகளில் அந்த வழியாக வருவோர் போவோர் மீதும் மஞ்சள் பூசியும், மஞ்சள் நீரை ஊற்றியும் கொண்டாடினர். இதையொட்டி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி உத்தரவின்பேரில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com