திருவிழா: பூஜையில் வைக்கப்பட்ட ஒரு எலுமிச்சை பழம் ரூ.45 ஆயிரத்து 500-க்கு ஏலம்

எலுமிச்சை பழத்தை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு தங்கள் வேண்டுதல் நிறைவேறும் என்ற நம்பிக்கை பக்தர்கள் மத்தியில் உள்ளது.
திருவிழா: பூஜையில் வைக்கப்பட்ட ஒரு எலுமிச்சை பழம் ரூ.45 ஆயிரத்து 500-க்கு ஏலம்
Published on

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஒட்டனந்தல் கிராமத்தில் பிரசித்திப்பெற்ற ரத்தினவேல் முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், சின்ன மயி லம் என்றும், இரட்டை குன்றின் மீது அமைந்துள்ளதால் இரட்டை குன்று முருகன் எனவும் அழைக்கப்படுகிறது.

இங்கு 11 நாட்கள் நடைபெறும் பங்குனி உத்திர விழாவில், முதல் 9 நாட்கள் நடைபெறும் திருவிழவின்போது இரட்டை குன்றின் மீது அமைந்துள்ள முருகன் அருகில் அமைந்துள்ள வேல் மீது ஒவ்வொரு நாளும் ஒரு எலுமிச்சை பழம் வீதம் 9 நாளும் வைத்து பூஜை செய்யப்படும். இந்த பழங்கள் அனைத்தையும் சேகரித்து வைத்து, 11-ம் நாள் திருவிழாவில் இரவு 11 மணிக்கு இடும்பன் சாமிக்கு கருவாடு சோறு படையல் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, ஊர் பொது மக் கள் முன்னிலையில் 9 நாள் எலுமிச்சை பழமும் ஏலம் விடப்படும். இதை பக்தர்கள் போட்டிப்போட்டு ஏலம் எடுத்துச்செல்வார்கள். இந்த எலுமிச்சை பழத்தை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு தங்கள் வேண்டுதல் நிறைவேறும் என்ற நம்பிக்கை பக்தர்கள் மத்தியில் உள்ளது.

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் 11-ம் திருவிழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இரவு 11 மணிக்கு இடும்பன் சாமிக்கு கருவாடு சோறு படையல் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர், 9 நாட்கள் பூஜை செய்யப்பட்ட எலுமிச்சை பழங்களை ஊர் பொது மக்கள் முன்னிலையில், மரசெருப்பின் மீது நின்று நாட்டாமை புருஷோத்தமன் ஏலம் விட்டார்.

இதில் முதல் நாள் எலுமிச்சை பழத்தை ஒட்டனந்தலை சேர்ந்த பவித்ரா- வெங்கடேசன் தம்பதியர் 45 ஆயிரத்து 500 ரூபாய்க்கு ஏலம் எடுத்தனர். அதை தொடர்ந்து 2-வது நாள் பூஜை செய்த எலுமிச்சை பழம் ரூ.15 ஆயிரத்திற்கும், 3-வது நாள் எலுமிச்சை பழம் ரூ. 16 ஆயிரத்திற்கும், 4-ம் நாள் பழம் ரூ. 14 ஆயிரத்து 500 ரூபாய்க்கும், 5-ம் நாள் விழா எலுமிச்சை பழத்தை ரூ.16 ஆயிரம், 6-ம் நாள் விழா பழம் ரூ. 16 ஆயிரத்து 500, 7-ம் நாள் பழம் ரூ.9 ஆயிரம், 8-ம்நாள் விழா பழம் ரூ.5 ஆயிரத்திற்கும், 9-ம் நாள் பழம் ரூ.5500-க்கும் ஏலம் எடுத்தனர். இதன் மூலம் 9 நாள் பழங்களும் ரூ.1 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.

பக்தர்களின் நம்பிக்கை

குழந்தையில்லாத தம்பதியினர், வியாபாரம் செய்பவர்கள். வீடுகட்ட முயல்பவர்கள். கல்யாணமாகாதவர்கள், தொழில் செய்ய முனைபவர்கள் என பலர் தங்கள் குறைகள் தீரும் என்ற நம்பிக்கையில் கலந்துகொண்டு ஏலம் எடுத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com