

நாகை,
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம், வாழ்மங்கலம் கிராமத்தில் மழை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. பந்தக்கால் முகூர்த்தம், கஞ்சி வார்த்தல், பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கிய இந்த விழாவில், தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகினற்ன.
அம்மனுக்கு மஞ்சள், பால், பன்னீர், தயிர், தேன், இளநீர், மாப்பொடி, திரவியப்பொடி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் சந்தனகாப்பு அலங்காரம் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டத்தில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் அன்ன வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.