பொன்னேரி கரிகிருஷ்ண பெருமாள் கோவிலில் தெப்ப உற்சவம்

தெப்பத்தில் எழுந்தருளிய பகவான், புஷ்கரணியில் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தெப்ப உற்சவம்
தெப்ப உற்சவம்
Published on

பொன்னேரி,

பொன்னேரி திருவாயர்பாடியில் ஸ்ரீ கரிகிருஷ்ண பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினந்தோறும் சுவாமி வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், அன்ன வாகனம் என தினமும் ஒவ்வொரு வாகனத்தில் ஸ்ரீகரிகிருஷ்ண பெருமாள் எழுந்தருளி மாட வீதிகள் வழியாக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான ஸ்ரீகரிகிருஷ்ண பெருமாளும் அகதீஸ்வரரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் ஹரிஹரன் சந்திப்பு மற்றும் ஸ்ரீகரிகிருஷ்ண பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, சமேதராக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தரும் தேர் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றன.

பிரம்மோற்சவத்தின் பதினோராம் நாளான நேற்று இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது. ஆலயத்தின் புஷ்கரணியில் புஷ்பங்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் ஸ்ரீகரிகிருஷ்ண பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தெப்பத்தில் எழுந்தருளிய பகவான், புஷ்கரணியில் மூன்று முறை வலம் வந்தார். அப்போது புஷ்கரணியின் கரையில் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் ‘கோவிந்தா... கோவிந்தா’ என முழக்கம் எழுப்பியபடி பகவானை தரிசனம் செய்தனர்.

விழாவில் திருவாயர்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

X

Daily Thanthi
www.dailythanthi.com