குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு ஊர்வலம்.. லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

கெங்கையம்மன் சிரசு கோவிலை வந்தடைந்ததும், சண்டாளச்சி உடலில் பொருத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அம்மன் சிரசு ஊர்வலம்
அம்மன் சிரசு ஊர்வலம்
Published on

குடியாத்தம்,

குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா உலக அளவில் புகழ் பெற்றது. இந்த திருவிழாவில் வேலூர் மட்டுமில்லாமல் தமிழ்நாட்டின் பிற பகுதிகள் மற்றும் வெளிமாநிலங்கள், சிங்கப்பூர், மலேசியா இலங்கை, நேபாளம், மாலத்தீவுகள் உள்ளிட்ட பல வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் 16 ஆம் தேதி சிரசு திருவிழாவிற்கான காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும் அதனைத் தொடர்ந்து சித்திரை மாதம் கடைசி நாள் தேரோட்டமும், வைகாசி ஒன்றாம் தேதி கெங்கையம்மன் சிரசு திருவிழாவும் நடைபெறும். அன்று மாலையில் மிக பிரம்மாண்டமான வாணவேடிக்கையும் நடைபெறும்.

அந்த வகையில் இந்த ஆண்டின் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. நேற்று தேர்த்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. வழக்கத்தைவிட அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

இன்று காலையில் அம்மன் சிரசு ஊர்வலம் நடைபெற்றது. அதிகாலையில் முத்தாலம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அங்கிருந்து காலை சுமார் 4.45 மணி அளவில் புறப்பட்ட அம்மன் சிரசு நீலிகோவிந்தப்ப செட்டிதெரு, காந்திரோடு, ஜவஹர்லால் தெரு வழியாக லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சுமார் நான்கரை மணி நேரம் மிதந்து காலை சுமார் 9.15 மணி அளவில் கோவிலை அடைந்தது.

வழிநெடுகிலும் நேர்த்திக்கடனாக பக்தர்கள் லட்சக்கணக்கான தேங்காய்களை உடைத்தனர், பல இடங்களில் ஆடு கோழிகளை பலியிட்டு வேண்டுதலை நிறைவேற்றினர். திரும்பும் திசையெல்லாம் வீடுகளிலும் மாடிகளிலும் சாலைகளிலும் கூட்டம் கூட்டமாக மக்கள் வெள்ளத்தால் சூழ்ந்து இருந்தது அம்மன் சிரசு ஊர்வலம் வரும்போது வழிநெடுகிலும் பூ மாலை அணிவிக்க ஆயிரக்கணக்கானோர் திரண்டு இருந்தனர். அதிகாலை முதலே வெளியூரில் இருந்து பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். மாடிகளில் இருந்து அம்மன் சிரசு மீது பூக்களை தூவி மகிழ்ந்தனர்.

ஊர்வலமாக பக்தர்களின் வெள்ளத்தில் மிதந்து சென்ற கெங்கையம்மன் சிரசு கோவிலை வந்தடைந்ததும், அம்மன் மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த சண்டாளச்சி உடலில் பொருத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சிரசு ஊர்வலம் மற்றும் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.

அம்மன் சிரசு ஊர்வலத்தைமுன்னிட்டு காலை முதலே பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கப்படட்து. குளிர்பானங்கள், நீர் மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டது. பல இடங்களில் இஸ்லாமியர்கள் தண்ணீர் பந்தல் அமைத்து குளிர்பானங்கள், மோர் ஆகியவற்றை வழங்கினார்கள், அன்னதானமும் வழங்கினார்கள். வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவராமன் தலைமையில் ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com