

தென்திருப்பேரை,
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டம், தென்திருப்பேரையிலுள்ள மகர நெடுங்குழைக்காதர் கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 1ம் தேதி காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. விழா நாட்களில் காலையிலும் மாலையிலும் சுவாமி அம்பாளுடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
5ம் நாள் திருவிழாவான நேற்று இரவு கருடசேவை நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 6 மணிக்கு விஸ்வரூபம். 7.30 மணிக்கு நித்தியல், 7.45 மணிக்கு தோளுக்கினியானில் மாடவீதி, ரதவீதி புறப்பாடு நடைபெற்றது.
மாலை 4 மணிக்கு நாலாயிர திவ்வியப் பிரபந்தம், சாத்துமுறை தீர்த்தம், சடாரி, பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலை 5.30 மணிக்கு சாயரட்சை நடைபெற்றது.
இரவில் உற்சவர் நிகரில் முகில் வண்ணன் கருட வாகனத்திலும் தாயார் திருப்பேரை நாச்சியார் அன்ன வாகனத்திலும் எழுந்தருளினர். பின்னர் இரவு 9.50 மணிக்கு வாகன சேவை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் வீதியுலா வந்த சுவாமி மற்றும் தாயாரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஏப்ரல் 8ம் தேதி மாலை 4 மணிக்கு குதிரை வாகனத்தில் உற்சவர் நிகரில் முகில் வண்ணன் எழுந்தருளி புறையூர் ஆணையப்ப பிள்ளை சத்திரம் வீதி புறப்பாடு நடக்கிறது. 9ம் தேதி காலை 8.55 மணிக்குள் தேரோட்டமும், 20ம் தேதி காலை 8 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.