பர்வதமலையின் சிறப்புகள்


பர்வதமலையின் சிறப்புகள்
x

பர்வதமலை உச்சியில் உள்ள ஆலயத்திற்கு கதவுகள் கிடையாது, அர்ச்சகரும் கிடையாது. பக்தர்களே பூஜை செய்யலாம்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே உள்ள கடலாடி என்ற இடத்தில் இருந்து தொடங்குகிறது, பர்வதமலை. தென்னிந்தியாவின் மிகவும் புனிதமான மற்றும் அற்புதமான மலையேற்றப் பகுதியாக இந்த மலை விளங்குகிறது.

கயிலாயத்தில் வீற்றிருந்த பார்வதி தேவி, 'பூமியில் பிறந்த மனிதர்கள், அறம், பொருள், இன்பம், வீடுபேறு அடைய சிறந்த தலம் ஏதும் உள்ளதா?' என்று ஈசனிடம் கேட்டார். அதற்கு சிவபெருமான் கைகாட்டிய தலமே, பர்வதமலை. அதன்படி பார்வதியும் இங்கு வந்து தவம் இருந்து ஈசனின் அருளைப் பெற்றார். பார்வதி தேவி தவம் புரிந்தமையால் இந்த மலை 'பார்வதி மலை' என்று அழைக்கப்பட்டு, காலப்போக்கில் 'பர்வதமலை' என்று ஆனதாக சொல்லப்படுகிறது.

இந்த மலையின் சிறப்புகள் வருமாறு:

* சுமார் 4 ஆயிரத்து 500 அடி உயரம் கொண்ட இந்த மலையின், செங்குத்தான பாறைகளின் உச்சியில் கோவில் அமைந்துள்ளது.

* கயிலாயத்தில் இருந்து சிவபெருமான் தென்பகுதிக்கு வந்தபோது, அவரது காலடிபட்ட முதல் இடம் இது என்று சொல்லப்படுகிறது.

* ராமாயண காலத்தில் அனுமன் சஞ்சீவி மலையை எடுத்துச் சென்றபோது, அதில் இருந்து விழுந்த ஒரு சிறு பகுதியே இந்த பர்வதமலை என்ற நம்பிக்கையும் உள்ளது.

* கயிலாய மலையை தரிசிக்க இயலாதவர்கள், இந்த மலையை தரிசித்து வழிபட்டாலே அந்தப் பலனை அடைந்துவிட முடியும்.

* இந்த மலை உச்சியை அடைய, செங்குத்தான பாறை மற்றும் பாறைகளால் ஆன படி, ஏணிப்படி, கரடு முரடான பாதை என சுமார் 5 கிலோமீட்டர் தொலைவுக்கு மலை ஏற வேண்டும்.

* மலை உச்சியில் உள்ள ஆலயத்திற்கு கதவுகளே கிடையாது. கோவிலுக்கு அர்ச்சகரும் இல்லை. இங்குள்ள பிரம்மராம்பிகை பேரழகுடன் வீற்றிருப்பதைக் காணலாம். பக்தர்களே பூஜை செய்யலாம்.

* மலையின் அடிவாரத்தில் பச்சையம்மன் கோவில் இருக்கிறது. இதன் வெளிப்புறத்தில் சப்த முனிகள் கம்பீரமாக எழுந்தருளி அம்பிகையை வழிபடுகிறார்கள்.

* இங்கு தீபம் ஏற்றி ஒருநாள் அபிஷேக, ஆராதனை செய்தால் வருடம் முழுதும், பூஜை செய்த பலன் கிடைக்கும்.

* பர்வதமலையில் அமர்ந்து தியானம் செய்தால், அவர்களுக்கு அம்பிகை ஞானத்தை வழங்குவாள்.

* இங்கு விநாயகர், முருகன், ஆஞ்சநேயர் ஆகியோருக்கும் சன்னிதிகள் உள்ளன. பவுர்ணமி நாளில் இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன .

1 More update

Next Story