மார்கழி மாதத்தின் முக்கிய உற்சவங்கள்

சிவாலயங்களில் நடைபெறும் முக்கிய உற்சவங்களில் ஒன்றான ஆருத்ரா தரிசனம் மார்கழி மாதத்தில் நடைபெறும்.
‘மாதங்களில் நான் மார்கழி’ என்று கீதையில் கிருஷ்ணர் அருளியுள்ளார். அதற்கேற்ப பல சிறப்புகளை மார்கழி மாதம் பெற்றுள்ளது. மார்கழி மாதம் வந்தாலே அதிகாலையில் எழுந்து நீராடி, இறைவனை வழிபடுவது என்பது வழக்கமான ஒன்றாகும்.
ஜோதிட சாஸ்திரப்படி, சூரிய பகவான் தனுசு ராசியில் பிரவேசிக்கும் மாதமாக மார்கழி மாதம் உள்ளது. எனவே மார்கழி மாதம், 'தனுர் மாதம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தெய்வ வழிபாட்டுக்குரிய சிறப்புமிக்க மாதமான மார்கழியில் விஷ்ணு வழிபாடு மட்டுமின்றி, சிவன் வழிபாடும் சிறப்பானதாகும். மார்கழி மாதம் அதிகாலையில் வைணவ தலங்கள் திறக்கப்பட்டு, திருப்பாவை பாசுரங்கள் பாடி திருப்பள்ளியெழுச்சி நடைபெறும். அதுபோல சிவன் கோவில்களிலும் மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை பாடப்படுகிறது.
மார்கழி மாதம் விடியற்காலையில் கன்னி பெண்களை துயில் எழுப்பி, ஆற்றில் நீராடி இறைவனை போற்றி வழிபடுவதை ஆண்டாள் திருப்பாவையில் விவரித்துள்ளார். அதன்படி, மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து, குளித்துவிட்டு பாவை நோன்பு இருந்து இறைவனை வழிபட்டால் மனதிற்கு பிடித்த கணவன் கிடைப்பார் என்பது நம்பிக்கை.
இதேபோன்று சிவ பக்தைகள், நோன்பு நோற்பதற்காக தோழிகளை எழுப்புவதாக அமைந்ததே, திருவெம்பாவை. சிவனடியாளர்களே கணவனாக வேண்டும் என்றும், பின்பு அவரோடு சேர்ந்து சிவனை தொழவேண்டும் என்பதே இதன் நோக்கம்.
கோகுலத்தில் இந்திரனால் பெருமழை உருவாக்கப்பட்டு, மக்கள் அனைவரும் துன்பப்பட்டபோது, கிருஷ்ணர் கோவர்த்தன மலையை குடையாகப் பிடித்து மக்களை காப்பாற்றினார். இந் நிகழ்வு நடந்தது மார்கழி மாதத்தில் தான். திருப்பாற்கடலை கடைந்தபோது, அதில் இருந்து ஆலகால விஷம் வெளிவந்தது. அந்த கொடிய விஷத்தை சிவபெருமான் உண்டு, உலக உயிர்களை காத்ததும் மார்கழி மாதத்தில்தான்.
மகாவிஷ்ணுவுக்கு உகந்த வைகுண்ட ஏகாதசி, இந்த ஆண்டு மார்கழி மாதம் 15-ந் தேதி (30-12-2025) அன்று செவ்வாய்க்கிழமை வருகிறது. அன்றைய தினம், ஆண்டு முழுவதும் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் சொர்க்கவாசல் திறக்கப்படும். அந்த சொர்க்கவாசல் வழியாக நுழைந்துவந்தால், வாழ்வில் உள்ள சிக்கல்கள் நீங்கும், செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.
சிவாலயங்களில் நடைபெறும் முக்கிய உற்சவங்களில் ஒன்றான ஆருத்ரா தரிசனம் மார்கழி மாதத்தில் நடத்தப்படும். அதன்படி மார்கழி மாதம் 19-ந் தேதி (3-1-2025) அன்று சனிக்கிழமை ஆருத்ரா தரிசனம் வருகிறது. இது சிதம்பரம் நடராஜர் கோவிலில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
அனுமன் அவதரித்த நாளாக மார்கழி மாதம் அமாவாசை நாள் கருதப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு மார்கழி மாதம் 4-ந் தேதி (19-12-2025) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் ஆஞ்சநேயருக்கு வடைமாலை, வெற்றிலை மாலை அணிவித்து வழிபட்டால் வாழ்வில் வெற்றிகள் குவியும்.
மார்கழி மாதம் 10-ந் தேதி (25-12-2025) வியாழக்கிழமை அன்று பிள்ளையார் நோன்பு வருகிறது. திருக்கார்த்திகையில் இருந்து 21 நாட்கள் விரதம் இருந்து விநாயகரை வழிபட வேண்டும். இந்த விரதம் இருந்து வழிபட்டால் இனிமையான வாழ்வு அமையும்.
மார்கழி மாதம் 30 நாட்களும் பெண்கள் அதிகாலையில் எழுந்து, நீராடிவிட்டு வீட்டின் முன்பு கோலமிட்டு அதன் மீது அழகான மலர்களால் அழகுபடுத்துவார்கள். கோலத்தின் மீது பரங்கிப்பூக்களை வைத்து அழகுபடுத்துவது வழக்கம். இதன்மூலம் மகாலட்சுமியே வீட்டிற்குள் குடியேறுவாள் என்பது ஐதீகம்.
இத்தகைய சிறப்புகள் நிறைந்த மார்கழி மாதத்தில், அதிகாலையில் கோவில்களுக்கு சென்று இறைவனை வழிபடுவதுடன், ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கலாம்.






