

ஆனி மாதம் கேட்டை நட்சத்திர தினத்தன்று பிரசித்தி பெற்ற வைணவ தலங்கள் மற்றும் முருகன் கோவில்களில் ஜேஷ்டாபிஷேகம் கொண்டாடப்படுகிறது. சூரியன் சஞ்சரிக்கும் ஆனி மாதத்திற்கு ஜேஷ்ட மாதம் என்றும் பெயர். கேட்டை நட்சத்திரத்திற்கு 'ஜேஷ்டா நட்சத்திரம்' என்ற பெயர் உண்டு. எனவே இந்நாளில் மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு செய்யப்படும் அபிஷேகம் 'ஜேஷ்டாபிஷேகம்' என்று அழைக்கப்படுகிறது.
ஜேஷ்டா நட்சத்திரத்திற்குரிய தெய்வமாக இந்திரன் கருதப்படுகிறார். எனவே இந்நாளில் நடைபெறும் ஜேஷ்டாபிஷேகத்தை தரிசனம் செய்தால் இந்திரனை போல வாழ்வு அமையும், தலைமைப் பதவி தேடி வரும் என்பது நம்பிக்கை.
அவ்வகையில் இந்த ஆண்டின் ஜேஷ்டாபிஷேகம் இன்று வழக்கமான சிறப்பு பூஜைகளுடன் நடைபெறுகிறது. ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில், இன்று (28.06.2026) ஸ்ரீ பெரிய பெருமாள், ஸ்ரீ நம்பெருமாள் ஜேஷ்டாபிஷேகம் விமரிசையாக நடைபெறுகிறது. ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு இன்று காலை, வட காவிரியில் (கொள்ளிடம் ஆறு) இருந்து தங்க குடம் மற்றும் வெள்ளி குடங்களில் புனித நீர் எடுத்து யானை மீது வைத்து ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அந்த புனித நீரால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. நறுமணப் பொருட்களாலும் அபிஷேகம் செய்யப்பட்டது. ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு இன்று முழுவதும் மூலவர் சேவை கிடையாது.
உற்சவ மூர்த்திகளின் மீது ஆண்டு முழுவதும் அணிவிக்கப்பட்டிருக்கும் கவசங்கள் இந்த நாளில் களையப்பட்டு, பரிபூரண தரிசனம் (ஏகாந்தத் திருமஞ்சனம்) வழங்கப்படுகிறது. சிறப்பு அபிஷேகத்திற்கு பிறகு கவசங்கள் சுத்தப்படுத்தப்பட்டு மீண்டும் அணிவிக்கப்படும்.