அழகர்மலைக்கு திரும்பிய கள்ளழகர்: வழிநெடுக வண்ண மலர்கள் தூவி வரவேற்ற பக்தர்கள்

பிரகாரத்தில் எழுந்தருளிய கள்ளழகருக்கு சிறப்புப் பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.
அழகர்மலைக்கு திரும்பிய கள்ளழகர்: வழிநெடுக வண்ண மலர்கள் தூவி வரவேற்ற பக்தர்கள்
Published on

மதுரை,

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா என்பது சைவ, வைணவ ஒற்றுமையை உலகுக்கு உணர்த்தும் உன்னதவிழா ஆகும். மீனாட்சி அம்மன் கோவிலில் இத்திருவிழா முதலில் தொடங்கும். பின்னர் மதுரையில் இருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ள வைணவ தலமான கள்ளழகர் கோவிலில் இந்த விழா தொடங்கும். அதன்படி, மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், தேரோட்டம் நடைபெற்றது.

இதற்கிடையே, அழகர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 27-ந்தேதி தொடங்கியது. ஏப்-29 மாலையில் அழகர் மதுரை புறப்பாடு நடந்தது. இதைக்காண ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர். கண்டாங்கி பட்டு உடுத்தி கையில் நேரிக்கம்பு ஏந்தி கள்ளழகர் தங்கப்பல்லக்கில் எழுந்தருளினார். 18-ம்படி கருப்பணசுவாமி சன்னதி முன்பு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தன. அப்போது கள்ளழகரின் பல்லக்கு உத்தரவு பெற்று நகர்ந்தது. உடனே அங்கு கூடியிருந்த பக்தர்கள் 'கோவிந்தா கோவிந்தா' என பக்தி கோஷங்கள் எழுப்பினர். சகல பரிவாரங்கள் முன்செல்ல பக்தர்களுக்கு காட்சி அளித்தபடி வந்தார்.

பொய்கைக்கரைபட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் மண்டபங்களில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வழிநெடுகிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மதுரை மூன்று மாவடிக்கு கள்ளழகர் வந்து சேர்ந்தார். அங்கு கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நடந்தது. அதில் பங்கேற்பதற்காக ஆயிரக்கணக்கானோர் மூன்று மாவடியில் திரண்டிருந்தனர். அவர்கள் கண்டாங்கி பட்டு உடுத்தி தங்கப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகருக்கு எதிர்சேவை அளித்தனர். அழகர், கருப்பணசாமி, அனுமார் வேடமணிந்த பக்தர்கள் ஆடிப்பாடியும், தீப்பந்தம் ஏந்தியும், பெண்கள் கையில் சர்க்கரை தீபம் ஏந்தியபடியும் கள்ளழகரை வரவேற்றனர். அப்போது கோவிந்தா கோவிந்தா என்று முழக்கமிட்டு பக்தர்கள் வழிபட்டனர். பல்வேறு வழிபாடுகளுக்கு பின்னர் தல்லாகுளம் பெருமாள் கோவிலை வந்து அடைந்தார். சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக மே-1 அதிகாலை தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளி வைகை ஆற்றில் இறங்கினார். இதைக்காண லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இந்நிலையில் மலைக்குத் திரும்பிய அழகருக்கு மக்கள் மலர்களைத் தூவியும், திருஷ்டி கழிப்பதற்காக பூசணிக்காய்களைச் சுற்றியும் தங்களின் நேர்த்திக்கடனைச் செலுத்தி வழிபட்டனர். பிரகாரத்தில் எழுந்தருளிய கள்ளழகருக்குச் சிறப்புப் பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. நாளையுடன் (மே 06, 2026) உற்சவ சாந்தியுடன் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நிறைவடைகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com