திருச்செந்தூரில் யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது கந்த சஷ்டி திருவிழா


கந்த சஷ்டி விழாவில் பங்கேற்று முருகப்பெருமானை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தவண்ணம் உள்ளனர்.

தூத்துக்குடி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் கந்தசஷ்டி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று (22.10.2025) கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. 5.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு எழுந்தருளினார். இதையடுத்து காலை 7 மணியளவில் யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது. தொடர்ந்து மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முதல் 6 நாட்கள் சஷ்டி விரதமும், முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரமும் (27ம் தேதி) நடைபெற உள்ளது. அதன்பின்னர் 28ம் தேதி முருகப்பெருமான்- தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறும். அடுத்து 5 நாட்களுக்கு ஊஞ்சல் சேவை நடைபெற உள்ளது.

கந்த சஷ்டி விழாவில் பங்கேற்று முருகப்பெருமானை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தவண்ணம் உள்ளனர். திருவிழா நாட்களில் தங்கி விரதம் இருக்கும் பக்தர்களுக்காக கோவில் வளாகத்தில் 18 இடங்களில் தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட்டு உள்ளன. பக்தர்களின் பாதுகாப்பு கருதி திருவிழா காலங்களில் 700 போலீசாரும், சூரசம்ஹாரம் நடைபெறும் தினமான 27-ந் தேதி 4,600 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கடற்கரை பகுதியில் போலீசார் கண்காணிக்கும் வகையில் ஆங்காங்கே கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும் கோவில் வளாகம் மற்றும் கடற்கரையில் தற்காலிக மின்விளக்கு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடலில் புனித நீராடும் பக்தர்கள் ஆழமான பகுதிக்கு செல்லாத வகையில் கடலில் தடுப்பு மிதவைகள் போடப்பட்டுள்ளன.

1 More update

Next Story