கன்னியாகுமரி: திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் வருஷாபிஷேக விழா

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஆகம ஆலோசகர் தலைமையில் வருஷாபிஷேக பூஜைகள் நடைபெற்றன.
வருஷாபிஷேக பூஜை
வருஷாபிஷேக பூஜை
Published on

கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தா கேந்திர வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 5.5 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.22 கோடி செலவில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்டப்பட்டு உள்ளது.

இந்த கோவிலில் மூலவராக வெங்கடாஜலபதியும், வலதுபுறம் ஸ்ரீதேவி தாயாரும், இடது புறம் ஸ்ரீ பூதேவி தாயாரும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். மேலும் மூலஸ்தானத்தின் வலதுபுறம் பத்மாவதி தாயார் சன்னதியும் இடதுபுறம் ஆண்டாள் சன்னதியும் அமைந்துள்ளது. மூலவரின் எதிரே கருடாழ்வார் எழுந்தருளியிருக்கிறார். 40 அடி உயர கொடி மரமும் அமைந்துள்ளது.

இந்த கோவிலில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ந் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகம் நடந்து 7 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து வருஷாபிஷேக விழாவை, நட்சத்திர திதியின்படி சப்தமி திதியான இன்று நடத்த திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஆகம ஆலோசகர் அறிவுரை வழங்கினார்.

அதன்படி கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோவிவில் 7-வது ஆண்டு வருஷாபிஷேக விழா இன்று நடைபெற்றது. வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுப்ரபாத சேவையும் அதைத் தொடர்ந்து 8 மணிக்கு புண்ணியாகவாசனம், அங்குரார்ப்பணம், ரக்சாபந்தனம், விசேஷ ஹோமம், அஸ்டோத்திர ஸத கலசாபிஷேகம், உற்சவமூர்த்திக்கு மகா சாந்தி ஹோமம், பூர்ணாஹுதி, அச்சதாரோபனம் போன்றவை நடைபெற்றன.

Also Read
கன்னியாகுமரி: முருகப்பெருமான், வள்ளி- தெய்வானைக்கு ஆராட்டு நிகழ்ச்சி
வருஷாபிஷேக பூஜை

அதைத்தொடர்ந்து சதாகலசாபிஷேக பூஜை நடந்தது. பின்னர் சுவாமிக்கு திருமஞ்சனம் சாத்துதலும் 11 மணிக்கு யாகசாலை பூஜையும் நடந்தது. ஹோமம், அபிஷேகத்தைத்தொடர்ந்து தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது.

வருஷாபிஷேக பூஜைகளை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஆகம ஆலோசகர் தலைமையில் திருப்பதி கோவில் அர்ச்சகர்கள் 3 பேரும் கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவில் அர்ச்சகர்களும் நடத்தினார்கள். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Also Read
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 26-ம் தேதி தெப்போற்சவம் ஆரம்பம்
வருஷாபிஷேக பூஜை

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com