கபிலர்மலையில் திருச்செந்தூர் சண்முகநாதர் கோவில் கும்பாபிஷேக விழா

சண்முகநாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலையில் இருந்து பாண்டமங்கலம் செல்லும் சாலையில் புதிதாக திருச்செந்தூர் சண்முகநாதர் கோவில் கட்டப்பட்டு அதன் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மங்கள கணபதியாகம் நடைபெற்றது. பின்னர் காலை 9:30 மணியளவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்தக் குடங்களுடன் மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.
மாலை 5 மணி அளவில் முதற்கால யாக பூஜை நடைபெற்றது. இரவு 9 மணி அளவில் யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தனம், மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று சனிக்கிழமை காலை 9.30 மணி சண்முகநாதருக்கு இரண்டாம் கால யாக பூஜை நடைபெற்றது. மாலை 5 மணி அளவில் புதிய மூர்த்திகளுக்கு மூன்றாம் கால பூஜையும், அபிஷேகமும் நடைபெற்றது.
இன்று அதிகாலை மங்கல இசை உடன் தமிழ் திருமுறை பாராயணம், அதிகாலை 5 30 மணியளவில் நான்காம் கால யாக பூஜை வழிபாடுகள் நடைபெற்றது. காலை 7:30 மணிக்கு மேல் 8 மணிக்குள் மங்கள வாத்தியங்கள் முழங்க விநாயகர், காசி விஸ்வநாதர், பாலமுருகன், திருச்செந்தூர் சண்முகநாதர் ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து சண்முகநாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சண்முகநாதர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.






