காரைக்குடி: கோட்டை நாச்சியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம்

கோட்டையூர் வசந்தமாளிகை பேருந்து நிறுத்தம் அருகே தேர் வந்தபோது இஸ்லாமிய பெண்கள் தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்தனர்.
தேரோட்டம்
தேரோட்டம்
Published on

காரைக்குடி,

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கோட்டையூரில் பிரசித்தி பெற்ற கோட்டை நாச்சியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரைத் திருவிழா மே 4-ம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. மேலும் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது.

முக்கிய நிகழ்வான ஒன்பதாம் நாள் திருவிழாவில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, காலையில் அம்மன் திருத்தேரில் எழுந்தருளி காட்சியளித்தார். மாலையில் பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். கோட்டையூர் வசந்தமாளிகை பேருந்து நிறுத்தம் அருகே தேர் வந்த போது சமூக நல்லிணக்கமாக இஸ்லாமிய பெண்கள் தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்து அம்மனை வழிபட்டனர்.

தொடர்ந்து தேர், பாரி நகரில் உள்ள காட்டம்மன் கோவிலை அடைந்தது. அங்கு இரவு முழுவதும் தங்கிய அம்மன் இன்று காலை மீண்டும் தேரில் கோட்டையூர் கோட்டை நாச்சியம்மன் கோவிலுக்கு புறப்பட்டது. தேரோட்டத்தில் காரைக்குடி, கோட்டையூர், கண்டனூர், பள்ளத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com