திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை கார்த்திகை தீப உற்சவம்: பவுர்ணமி கருடசேவை ரத்து

ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று நடக்கும் கருடசேவை (கருடவாகன வீதிஉலா) ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை கார்த்திகை தீப உற்சவம்: பவுர்ணமி கருடசேவை ரத்து
Published on: 

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை (செவ்வாய்க்கிழமை) கார்த்திகை தீப உற்சவம் நடக்கிறது. அதையொட்டி பவுர்ணமி கருடசேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

கார்த்திகை தீப உற்சவம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவுர்ணமியான நாளை (செவ்வாய்க்கிழமை) கார்த்திகை தீப உற்சவம் நடக்கிறது. கோவிலில் மாலை நேர கைங்கரியங்கள் மற்றும் நைவேத்தியங்கள் நிறைவடைந்ததும், பின்னர் தீப உற்சவம் நடக்கிறது. அதையொட்டி மாலை 5 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை நெய் திரிகளால் தீபங்கள் ஏற்றப்பட்டு, சத்ரம், சாமரம் மற்றும் மங்கள வாத்தியங்களுடன் ஊர்வலமாக விமானப்பிரகாரத்தை வலம் வந்து ஆனந்த நிலையத்தில் மூலவருக்கு ஆரத்தி காண்பிக்கப்படுகிறது.

தீபங்கள் ஏற்றம்

தொடர்ந்து கருவறையில் உள்ள அகண்டம், குலசேகரப்படி, ராமுலவாரி மேடை, துவாரபாலகர்கள், கருடாழ்வார், வரதராஜசாமி சன்னதி, வகுளமாதா சன்னதி, தங்கக்கிணறு, கல்யாண மண்டபம், சபாஅறை, தாளப்பாக்கம் அறை, பாஷ்யகாரர் சன்னதி, யோக நரசிம்மர், விஸ்வக்சேனர், சந்தனம் அரைக்கும் அறை, பரிமள அறை, வெள்ளி வாசல், கொடிமரம், பலிபீடம், திருமலை அருகே சேஷாசலம் வனப்பகுதியில் உள்ள ஷேத்திரா பாலகர் சன்னதி, திருமலைராயர் மண்டபம், பூக்கிணறு, ரங்கநாயகர் மண்டபம், மகாதுவாரம், பேடி ஆஞ்சநேயர், வராகசாமி கோவில் மற்றும் கோவில் புஷ்கரணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீபங்கள் ஏற்றப்படுகிறது.

பவுர்ணமி கருடசேவை ரத்து

கோவிலில் நடக்கும் கார்த்திகை தீப உற்சவத்தை முன்னிட்டு ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று நடக்கும் கருடசேவை (கருடவாகன வீதிஉலா) ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கும் சகஸ்ரதீப அலங்கார சேவை ரத்து செய்யப்படுவதாக திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

X