கரூர்: சிந்தலவாடி மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழா

இளைஞர்கள் தூக்குத் தேரை தூக்கி சுமந்தவாறு கோவிலை சுற்றி 3 முறை வலம் வந்தனர்.
சிந்தலவாடி மகா மாரியம்மன் கோவில் தூக்கு தேரோட்ட நிகழ்ச்சி
சிந்தலவாடி மகா மாரியம்மன் கோவில் தூக்கு தேரோட்ட நிகழ்ச்சி
Published on

கரூர்,

கரூர் மாவட்டம் லாலாபேட்டை அருகே உள்ள சிந்தலவாடியில் மகா மாரியம்மன் கோவிலில் கடந்த மே 3-ந்தேதி பூச்சொரிதல் நிகழ்வுடன் வைகாசி பெருந்திருவிழா தொடங்கியது. கடந்த 13-ந்தேதி முதல் சிந்தலவாடி, மேல சிந்தலவாடி, கீழ சிந்தலவாடி, விட்டுக்கட்டி, லாலாபேட்டை, மகிளிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பால்குடம், தீர்த்த குடம் எடுத்து வந்து வழிபட்டனர்.

வைகாசி பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தூக்கு தேரோட்ட நிகழ்ச்சி நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி மகா மாரியம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், குங்குமம், விபூதி உள்பட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

அதன்பின்னர் பல வண்ண மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த தூக்குத் தேரில் மகா மாரியம்மனை எழுந்தருள செய்து, தூக்குத்தேர் நிகழ்ச்சி தொடங்கியது. 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு தூக்குத் தேரை தூக்கி சுமந்தவாறு கோவிலை சுற்றி 3 முறை வலம் வந்தனர்.

தூக்கு தேரோட்ட நிகழ்ச்சியில் சிந்தலவாடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பலர் மாவிளக்கு படைத்தும், தேங்காய் பழம் உடைத்தும் அர்ச்சனை செய்து வழிபட்டனர். தூக்கு தேரோட்ட நிகழ்ச்சியை முன்னிட்டு சிந்தலவாடி கிராம பகுதியைச் சேர்ந்த பலரும் பக்தர்களுக்கு நீர்மோர் மற்றும் அன்னதானம் வழங்கினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com