கருவாழக்கரை காமாட்சி அம்மன் கோவிலில் வருடாபிஷேக விழா

கோவில் பிரகாரத்தில் பிரம்மாண்ட யாக குண்டம் அமைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, செம்பனார்கோவில் அருகே கருவாழக்கரை கிராமத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வருடாபிஷேக விழா மற்றும் சர்வமங்கள சதசண்டி ஹோமம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடந்த 18ஆம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, ஏக தின லட்சார்ச்சனை ஆரம்பமாகி முதலாம் கால வருடாபிஷேக யாகம் தொடங்கியது. பின்னர் பூர்ணாகுதி செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இரண்டாம் மற்றும் மூன்றாம் கால வருடாபிஷேக யாகம் செய்து ஆராதனை நடைபெற்றது. இதனையடுத்து நான்காம் கால வருடாபிஷேக யாகம் மற்றும் சதசண்டி யாகம் நடைபெற்றது. பின்னர் கோபூஜை, அஸ்வ பூஜை, கஜ பூஜை, சப்த சதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.
கோவில் பிரகாரத்தில் பிரம்மாண்ட யாக குண்டம் அமைக்கப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க யாக குண்டத்தில் பல்வேறு நறுமண பொருட்கள் மற்றும் பட்டுப்புடவை, தாலி சரடு, கொலுசு, காப்பு உள்ளிட்ட பொருட்கள் செலுத்தி சிறப்பு யாகம் நடைபெற்றது. தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் இசைக்க, கடம் புறப்பாடாகி கோவில் பிரகாரத்தை வலம் வந்து அம்மன் சன்னதி முன்பு நிறைவடைந்தது. இதனையடுத்து காமாட்சி அம்பாளுக்கு கலசாபிஷேகம் செய்து, வெள்ளிக்கவசம் அணிவித்து பட்டுப் புடவை மற்றும் மலர் மாலைகளால் அலங்காரம் செய்து ஆராதனை நடைபெற்றது.
தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனுக்கு மகாதீபாராதனை காண்பித்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.






