கீழ்பென்னாத்தூர் திரவுபதி அம்மன் கோவில் விழா.. அர்ஜுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி

அர்ஜுனன் தபசு நிகழ்ச்சியின்போது வீசப்பட்ட பூ மற்றும் எலுமிச்சம்பழங்களை குழந்தைப்பேறு இல்லாத பெண்கள் மடி ஏந்தி பெற்றுக் கொண்டனர்.
கீழ்பென்னாத்தூர் திரவுபதி அம்மன் கோவில் வசந்த உற்சவ விழா.. அர்ஜுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி
அர்ஜுனன் தபசு
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் கடந்த மாதம் 21-ந்தேதி முதல் வசந்த உற்சவ விழா நடைபெற்று வருகிறது. தினமும் காலையில் அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், பகலில் மஹாபாரத சொற்பொழிவும், இரவில் வாணவேடிக்கையுடன் அம்மன் வீதி உலாவும் தெருக்கூத்தும் நடைபெற்று வருகிறது.

19-ம் நாள் விழாவில் அர்ச்சுனன் தபசு மரம் ஏறும் தெருக்கூத்து நிகழ்ச்சி நடந்தது. அப்போது கோவில் வளாகம் முன்பாக சுமார் 35 அடி உயரமுள்ள பனை மரத்தில் 18 மரக்கொம்பு படிகள் அமைத்து தபசு மரமாக நட்டு வைத்திருந்தனர். அர்ச்சுனன் வேடமணிந்த கலைஞர் அந்த மரத்தில் ஏறினார். ஒவ்வொரு படிக்கட்டில் ஏறும்போதும் சிவபெருமானை வேண்டிக்கொண்டு பாடல் பாடினார்.

குழந்தைப்பேறு நம்பிக்கை

மரத்தின் உச்சிக்கு சென்றதும் அங்கிருந்த பலகையில் அமர்ந்து சிவபூஜை செய்ததுடன், அங்கிருந்தபடி பூ மற்றும் எலுமிச்சம்பழங்களை வீசினார். இதனை குழந்தைப்பேறு இல்லாத பெண்கள் மடி ஏந்தி பெற்றுக் கொண்டனர். இதனால் தங்களுக்கு குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது ஆன்மிக நம்பிக்கை ஆகும்.

கீழ்பென்னாத்தூர், கருங்காலிகுப்பம், கொட்டாவூர், நெடுங்காம் பூண்டி, மேட்டுபாளையம், ராஜாதோப்பு, எலந்தம் புறவடை உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தபசு மரம் ஏறும் நிகழ்ச்சியினை கண்டுகளித்தனர்.

கடந்த 2023-ம் ஆண்டில் அர்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சியின்போது, மடி ஏந்தி எலுமிச்சம்பழம் மற்றும் பூக்களை பெற்ற பெண்கள் தற்போது குழந்தைப்பேறு பெற்று, தங்களின் கைக்குழந்தைகளுடன் இந்த ஆண்டின் உற்சவத்தில் கலந்து கொண்டு பிரார்த்தனைகளை நிறைவேற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாசுபத அஸ்திரம்

மகாபாரத காலத்தில் அர்ஜுனன் சிவபெருமானிடம் பாசுபத அஸ்திரத்தைப் பெறுவதற்காக ஒற்றைக் காலில் நின்று தவம் செய்த நிகழ்வு ‘அர்ஜுனன் தபசு’ என்று அழைக்கப்படுகிறது.

இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் நடைபெறும் மகாபாரத திருவிழாக்களில், அர்ஜுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. கலைஞர்கள் உயரமான தபசு மரத்தில் ஏறி அர்ஜுனன் தவமிருப்பதை தத்ரூபமாக நடித்துக் காட்டுகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com