கூவாகம் திருவிழா: அரவான் களப்பலி.. ஒப்பாரி வைத்து அழுத திருநங்கைகள்

அரவான் தோ அழிகளம் நோக்கி புறப்பட்டவுடன் தேரை பின்தொடர்ந்து சென்ற திருநங்கைகள் ஒப்பாரி வைத்து அழுதனர்.
அழிகளம் நோக்கி புறப்பட்ட தேர்
அழிகளம் நோக்கி புறப்பட்ட தேர்
Published on

விழுப்புரம்,

மூன்றாம் பாலினமாக கருதப்படும் திருநங்கைகள் தங்களின் குலதெய்வமாக வணங்கும் கூத்தாண்டவர் கோவில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கிராமத்தில் உள்ளது. இக்கோவிலில் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. விழாவில் கலந்துகொள்வதற்காக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுப்புரம் மற்றும் கூவாகம் கிராமத்திற்கு வந்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று மாலை அரவான் சாமி திருக்கண் திறத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி ஆயிரக்கணக்கான திருநங்கைகள், பட்டுப்புடவை அணிந்தும், தலைநிறைய பூக்களை வைத்துக் கொண்டும், கைநிறைய வளையல்கள், காது, மூக்கு, கழுத்தில் நகைகளை அணிந்து தங்களை புது மணப்பெண் போன்று அலங்கரித்துக்கொண்டு கூத்தாண்டவர் கோவிலுக்கு வந்தனர்.

தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்
தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

பின்னர் அங்குள்ள கடைகளில் திருமாங்கல்யத்தை வாங்கிய திருநங்கைகள், கோவிலுக்குள் சென்று அரவானை பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, அரவானை தங்கள் கணவராக பாவித்துக் கொண்டு கோவில் பூசாரி கையால் தாலி கட்டிக்கொண்டனர்.

அதன் பிறகு கோவிலில் இருந்து வெளியே வந்த திருநங்கைகள், கோவில் வளாகத்தில் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி கூத்தாண்டவரை வழிபட்டதுடன் ஆடிப்பாடி கும்மியடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கூத்தாண்டவர் கோவில் அருகில் இரவு முழுவதும் விடிய, விடிய நடனமாடியும், கும்மியடித்தும் கூத்தாண்டவரை தனது கணவராக நினைத்தும் அவரின் அருமை, பெருமைகள் குறித்து ஆடிப்பாடி உற்சாகமடைந்தனர்.

இன்று (புதன்கிழமை) அதிகாலை கோவிலில் உள்ள அரவான் சிரசுக்கு முதல் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பிறகு தேரோட்டம் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள், கூவாகம், கீரிமேடு, நத்தம் உள்ளிட்ட சுற்றுப்புறக் கிராமங்களைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள், பொதுமக்கள், திருநங்கைகள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேர் புறப்பட்டவுடன் விவசாயிகள், தங்கள் வேண்டுதலின்படி, தங்கள் நிலங்களில் விளைந்த காய்கறிகளையும், தானியங்களையும் அரவான் மீது வீசியும், கற்பூரம் ஏற்றியும் வழிபாடு செய்தனர்.

கோவிலின் 4 மாட வீதிகள் வழியாக பக்தர்களின் வெள்ளத்தில் ஆடி, அசைந்தபடி வந்த தேர், பின்னர் அழிகளம் நோக்கி புறப்பட்டவுடன் தேரை பின்தொடர்ந்து சென்றவாறு திருநங்கைகள் ஒப்பாரி வைத்து அழுதனர்.

நத்தம் கிராம பந்தலுக்கு தேர் சென்றடைந்ததும் அங்கு அரவான் களப்பலி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது திருநங்கைகள் தங்கள் தலையில் சூடியிருந்த பூக்களை பிய்த்து எறிந்து, நெற்றியில் உள்ள குங்கும பொட்டை அழித்துக்கொண்டனர்.

பின்னர் பூசாரிகளிடம் சென்று கை வளையல்களை உடைத்து, கழுத்தில் அணிந்திருந்த தாலியை அகற்றிக்கொண்டனர். அந்த தாலியை அங்கிருந்த இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். பின்னர் அருகிலிருந்த விவசாய நிலங்களுக்குச் சென்று நீராடி, வெள்ளாடை அணிந்து விதவைக் கோலம் பூண்டு சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com