

கோத்தகிரி,
கோத்தகிரி டானிங்டனில் உள்ள கருமாரியம்மன் கோவில் வருடாந்திர திருவிழா நேற்று காலை 9 மணிக்கு காப்பு கட்டுதல், 11 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக அலங்கார பூஜையுடன் துவங்கியது. இன்று காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 7 மணிக்கு வராஹி அம்மன், கன்னிமார், கருப்பராயர் மற்றும் தன்னாசியப்பருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
9.30 மணிக்கு டானிங்டன் மகா சக்தி கணபதி திருக்கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் மற்றும் அக்னி சட்டி எடுத்து வருதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து 10.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜையும் நடந்தது. காலை 11.30 மணிக்கு திருமாங்கல்ய பூஜை நடத்தப்பட்டு 11.55 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இரவு 7.30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில் கருமாரியம்மன் வீற்றிருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.
நாளை காலை 9 மணிக்கு மறுபூஜையும், அபிஷேக, அலங்கார பூஜையும் நடத்தப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.