கொட்டாரம் பெருமாள்புரம் வெட்டிமுறிச்சான் இசக்கியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

கும்பாபிஷேக விழாவில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., நடிகை ரோஜா மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேக விழா
கும்பாபிஷேக விழா
Published on

கன்னியாகுமரி,

கொட்டாரம் பெருமாள்புரத்தில் ஸ்ரீ வெட்டி முறிச்சான் இசக்கி அம்மன் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2014-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு அதற்கான திருப்பணிகள் நடைபெற்றன. இப்பணிகள் நிறைவு பெற்றதையடுத்து அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா கடந்த 30-ந்தேதி மாலை மங்கள இசையுடன் தொடங்கியது.

அதைத்தொடர்ந்து திருமுறை பாராயணமும் விநாயகர் பூஜை, புண்யாக வாசனம், பஞ்சகவ்ய பூஜை, கலச பூஜை, கணபதி ஹோமம், தேவி மூல மந்திர ஹோமம் மற்றும் திரவியஹோமம் நடந்தது.

அதன் பிறகு 2-வது நாள் அன்று காலையில் பூர்வாங்க பூஜைகளுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஆதியில் தோன்றிய மூலஸ்தானத்தில் அமைந்து உள்ள தேவி ஸ்ரீ வெட்டி முறிச்சான் இசக்கி அம்பிகைக்கு கலசாபிஷேக கும்பாபிஷேகம் நடந்தது.

3-வது நாளான நேற்று முன்தினம் மாலை கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் இருந்து பறவை காவடி, இலுவை காவடி, நையாண்டி மேளம், சிங்காரி மேளம், செண்டை மேளம், மகுடாட்டம், கேரள தையம் ஆட்டம், கேரள காவடி கட்டுடன் பெண்களின் முளைப்பாரி, முத்துக்குடை அணிவகுப்புடன் பெண்கள் புனித நீர் எடுத்து ஊர்வலமாக வந்த நிகழ்ச்சி நடந்தது. நெற்றிபட்டம் அணிவித்து அலங்கரிக்கப்பட்ட யானை மீது அம்மனுக்கு அபிஷேகத்துக்குரிய புனித நீர் ஊர்வலமாக எடுத்து கொண்டு வரப்பட்டது. 4-வது நாளான நேற்று 2 மற்றும் 3-வது கால யாகசாலை பூஜை நடந்தது.

5-வது நாளான இன்று காலை யாகசாலை பூஜைகள் நிறைவுபெற்று, 8.30 மணிக்கு கடம்புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் ஸ்ரீவெட்டி முறிச்சான் இசக்கியம்மன் மற்றும் அதன் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் பக்தர்கள் மீது டிரோன் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது.

கும்பாபிஷேக விழாவில் பெருங்குளம் செங்கோல் ஆதீனம் ஸ்ரீல ஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்திய ஞான பரமாச்சாரிய சுவாமிகள் கலந்துகொண்டு அருளாசி வழங்கினார்.

கும்பாபிஷேக விழாவுக்கு கோவில் அறங்காவலர் குழு தலைவர் ராஜதுரை தலைமை தாங்கினார். செயலாளர் செந்தில்குமார் பொருளாளர் ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தளவாய்சுந்தரம், எம். எல்.ஏ., நடிகை ரோஜா, அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.பார்த்தசாரதி உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

கும்பாபிஷேகம் நடைபெற்றதைத் தொடர்ந்து, 41 நாட்கள் மண்டல பூஜையும், மே மாதம் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் கொடை விழாவும் நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com