

கோவில்பட்டி,
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருந்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த வகையில், இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, திருவனந்தல் பூஜை, திருப்பள்ளி எழுச்சி நடைபெற்றது. பின்னர் சுவாமி, அம்பாள் மற்றும் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து சுவாமி சன்னதி முன்பு கும்ப பூஜை, சிறப்பு ஹோமம் நடைபெற்றது. பின்னர் கொடிப்பட்ட ஊர்வலம் நடைபெற்றது. கொடிப்பட்டம் ரத வீதிகளை சுற்றி வந்து கோவிலை வந்தடைந்ததும், காலை 7.30 மணியளவில் சுவாமி சன்னதியின் முன்புள்ள கொடி மரத்தில் பங்குனி பெருந்திருவிழா கொடியேற்றப்பட்டது.
பின்னர் கொடிமரம், நந்தியம் பெருமான், சுவாமி, அம்பாள், பலிபீடம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இரவு 7 மணிக்கு மேல் சுவாமி- அம்பாள் பூங்கோவில் வாகனத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் திருவிழா நாட்களில் மண்டக படிதாரர்கள் சார்பில் காலையிலும், மாலையிலும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். வருகிற 13-ந் தேதி (திங்கட்கிழமை) தேரோட்டமும், 14-ந் தேதி தீர்த்தவாரியும், 15-ந்தேதி இரவு தெப்ப உற்சவமும் நடக்கிறது.