குலசை தசரா விழா: நவநீத கிருஷ்ணர் திருக்கோலத்தில் முத்தாரம்மன் இன்று வீதிஉலா

தசரா குழுவினர் காப்புகட்டுவதற்காக 6-ம் திருவிழாவான நாளை (ஞாயிற்றுக்கிழமை) கோவிலுக்கு வருவார்கள்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. 3-ம் நாள் திருவிழாவான நேற்று முன்தினம் இரவில் அம்மன் ரிஷப வாகனத்தில் பார்வதி திருக்கோலத்தில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
4-ம் திருவிழாவான நேற்று காலை 7.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை குறிப்பிட்ட நேரங்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. காலை 9 மணிக்கு காவடி திருவீதி வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 10 மணிக்கு மயில் வாகனத்தில் பாலசுப்ரமணியர் திருக்கோலத்தில் அம்மன் திருவீதி உலா வருதல் நடைபெற்றது. இக்கோலத்தில் அம்மனை தரிசித்தால் நன்மக்கள் பேரு கிடைக்கும் என்பது ஐதீகம். இதையொட்டி ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
5-ம் திருவிழாவான இன்று (சனிக்கிழமை) இரவு காமதேனு வாகனத்தில் நவநீத கிருஷ்ணர் திருக்கோலத்தில் அம்மன் எழுந்தருளி வீதியுலா வருகிறார். தசரா குழுவினர் காப்புகட்டுவதற்காக 6-ம் திருவிழாவான நாளை (ஞாயிற்றுக்கிழமை) கோவிலுக்கு வருவார்கள். கடலில் புனித நீராடிவிட்டு மேள தாளங்களுடன் ஆடி-பாடி கோவிலுக்கு வந்து காப்புகட்டுவார்கள்.
அவர்கள் தங்களின் நேர்த்திக்கடனுக்காக காளி, சிவன், முருகன், குறவன்-குறத்தி உள்ளிட்ட பல்வேறு வேடமணிகின்றனர். வீடு, கடைகள் என வீதி வீதியாக சென்று பொதுமக்களிடம் காணிக்கைகளை வசூலித்து கோவிலில் நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர்.
10-ம் திருவிழாவான 2-ந் தேதி வரை மேளதாளங்கள், தாரை தப்பட்டம் மற்றும் கரகாட்டம், டிஸ்கோ டான்ஸ் போன்ற கலை நிகழ்ச்சிகளை பல்வேறு இடங்களில் நடத்துகின்றனர். தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷாசூர சம்கார நிகழ்ச்சி வருகிற 2-ந் தேதி நள்ளிரவு 12 மணிக்கு குலசேகரன்பட்டினம் சிதம்பரேஸ்வரர் கோவில் கடற்கரை வளாகத்தில் நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.






