குலசை தசரா திருவிழா: சூரசம்ஹாரம் நிறைவு - மகிஷாசூரனை வதம் செய்தார் முத்தாரம்மன்

மனித முகம், சிங்க முகம், எருது முகம் மற்றும் சேவல் உருவில் வந்த மகிஷாசூரனை முத்தாரம்மன் வதம் செய்தார்.
குலசை தசரா திருவிழா: சூரசம்ஹாரம் நிறைவு - மகிஷாசூரனை வதம் செய்தார் முத்தாரம்மன்
Published on: 

தூத்துக்குடி,

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் தற்போது கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

தசரா திருவிழா

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டினம் பகுதியில் பிரசித்தி பெற்ற முத்தாரம்மன் கோவில் அமைந்துள்ளது. ஆண்டு தோறும் குலசை முத்தாரம்மன் கோவிலில் தசரா விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்களும் விரதம் இருந்து வேடம் அணிந்து கோவிலுக்கு செல்வது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்களாக நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒவ்வொரு நாள் இரவும் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளினார். பக்தர்கள் காளி, ராமர், அனுமார் உள்ளிட்ட பல்வேறு வேடங்களை அணிந்து வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.

சூரசம்ஹாரம்

விழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று(செவ்வாய்க்கிழமை) இரவு தொடங்கியது. சூரசம்ஹாரத்தை முன்னிட்டு குலசேகரன்பட்டினத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அங்கு சுமார் 4,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

10 கண்காணிப்பு கோபுரங்கள், 50 உதவி மையங்கள், 300 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பக்தர்களின் வசதிக்காக 350-க்கும் மேற்பட்ட இடங்களில் கழிப்பறை வசதிகள் மற்றும் குடிநீர் வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

கனமழை

இதனிடையே குலசை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்ததால் அங்கு சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. கனமழை காரணமாக அங்கு பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொது மக்கள் அவதிக்குள்ளாகினர். மேலும் குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு செல்லும் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சிம்ம வாகனத்தில் புறப்பட்ட முத்தாரம்மன்

இந்நிலையில், குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நள்ளிரவில் கோலாகலமாக தொடங்கியது. சிவப்பு பட்டு உடுத்தி வீரவாள், திருசூலத்துடன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய முத்தாரம்மன், 10 கைகளில் திரிசூலம், வில், வஜ்ராயுதம் உள்ளிட்ட ஆயுதங்களை ஏந்தி சூரனை வதம் செய்ய புறப்பட்டார்.

சூரசம்ஹாரத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் குலசை கோவிலில் குவிந்தனர். செண்டை மேளம் இசைக்க, பக்தர்களின், ‘ஓம் காளி.. ஜெய் காளி..’ கோஷத்துடன், வீரப்பல், விரித்த சடையுடன் மகிஷனை வதம் செய்வதற்காக முத்தாரம்மன் கடற்கரைக்கு வந்தடைந்தார்.

சூரசம்ஹாரம்

முதலில் மனித தலையுடன் வந்த மகிஷாசூரனை முத்தாரம்மன் வதம் செய்தார். அதைத் தொடர்ந்து 2-வதாக சிங்க முகத்துடன் வந்த மகிஷாசூரனை சூலாயுதத்தால் முத்தாரம்மன் வதம் செய்தார். அதன் பின்னர் 3-வதாக எருது முகத்துடன் வந்து, அம்மனை வலப்புறமும், இடப்புறமும் சுற்றி வந்து போரிட்ட மகிஷாசூரனை முத்தாரம்மன் வதம் செய்தார்.

இறுதியாக, சேவல் உருவில் வந்த மகிஷாசூரனை, சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய முத்தாரம்மன் தனது சூலாயுதத்தால் சம்ஹாரம் செய்தார். சூரசம்ஹாரத்தை தொடர்ந்து முத்தாரம்மனுக்கு சாந்தாபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து திருவீதி உலா நடைபெற்றது. அதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com