குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்


குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா:  நாளை  கொடியேற்றத்துடன் தொடக்கம்
x
தினத்தந்தி 22 Sept 2025 8:53 AM IST (Updated: 22 Sept 2025 8:55 AM IST)
t-max-icont-min-icon

10-ம் திருநாளான அக்டோபர் 2-ந்தேதி இரவு 12 மணிக்கு மகிஷா சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

குலசேகரன்பட்டினம்,

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் தசரா திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். பல லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவார்கள்.

கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு காளி பூஜை, மாலை 5 மணிக்கு சகஸ்ரநாமம் அர்ச்சனை, புஷ்பாஞ்சலி, இரவு 7 மணிக்கு வில்லிசை நடக்கிறது.

நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலையில் கொடிப்பட்டம் ஊர்வலம் நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து விரதமிருக்கும் பக்தர்கள் கோவில் பூசாரியிடம் மஞ்சள் கயிற்றாலான காப்பு அணிந்து கொள்வார்கள்.

காப்பு அணியும் பக்தர்கள், கோவிலில் இருந்து காப்புகளை மொத்தமாக வாங்கி சென்று தங்களது ஊர்களில் விரதம் இருக்கும் பக்தர்களுக்கும் வழங்குவார்கள். காப்பு அணிந்த பின்னர் பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்து, 10-ம் நாளில் கோவிலில் செலுத்துவார்கள்.

தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் காலை, மதியம், மாலையில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். விழா நாட்களில் தினமும் இரவு 10 மணியளவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார்.

முதலாம் நாள் இரவில் அம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்திலும், 2-ம் நாள் இரவில் கற்பகவிருட்சம் வாகனத்தில் விசுவகர்மேசுவரர் திருக்கோலத்திலும், 3-ம் நாள் இரவில் ரிஷப வாகனத்தில் பார்வதி திருக்கோலத்திலும், 4-ம் நாள் இரவில் மயில் வாகனத்தில் பாலசுப்பிரமணியர் திருக்கோலத்திலும், 5-ம் நாள் இரவில் காமதேனு வாகனத்தில் நவநீத கிருஷ்ணர் திருக்கோலத்திலும்,

6-ம் நாள் இரவில் சிம்ம வாகனத்தில் மகிஷாசுரமர்த்தினி திருக்கோலத்திலும், 7-ம் நாள் இரவில் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்திலும், 8-ம் நாள் இரவில் கமல வாகனத்தில் கஜலட்சுமி திருக்கோலத்திலும், 9-ம் நாள் இரவில் அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலத்திலும் அம்மன் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

10-ம் திருநாளான வருகிற 2-ந்தேதி (வியாழக்கிழமை) இரவு 12 மணிக்கு மகிஷா சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. 11-ம் திருநாளான 3-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலையில் அம்மன் தேர் பவனி கோவிலை வந்தடைந்தவுடன் பக்தர்கள் காப்பு களைந்து விரதத்தை முடிப்பார்கள். 12-ம் திருநாளான 4-ந்தேதி (சனிக்கிழமை) மதியம் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் செல்வி, கோவில் ஆய்வாளர் முத்துமாரியப்பன், செயல் அலுவலர் வள்ளிநாயகம், அறங்காவலர் குழு தலைவர் கண்ணன், அறங்காவலர்கள் ரவீந்திரன் குமரன், மகாராஜன், கணேசன், வெங்கடேஸ்வரி ஆகியோர் செய்து வருகின்றனர்.

1 More update

Next Story