

மதுக்கூர்,
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் மதுக்கூர் கீழக்காட்டில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு அதற்கான திருப்பணிகள் நடைபெற்றன. கடந்த சில மாதங்களாக நடைபெற்ற திருப்பணி வேலைகள் நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேக விழா தொடங்கியது.
இதற்காக யாக சாலை அமைக்கப்பட்டு ஹோமங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. யாகசாலை பூஜைகள் இன்று காலையில் நிறைவடைந்து மகா பூர்ணாஹுதியைத் தொடர்ந்து கடம் புறப்பாடு நடைபெற்றது.
யாக சாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீர் கலசத்தை சுமந்தபடி சிவாச்சாரியார்கள் கோவிலை வலம் வந்து விமானத்தை அடைந்தனர். பின்னர் வேத மந்திரங்கள் முழங்க, அந்த புனித நீரால் விமானம், மூலவர் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.