திருப்பதி: சர்வ தரிசன டோக்கன் பெறாமல் சென்ற பக்தர்கள் 30 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவில், அலிபிரி சோதனைச்சாவடி
திருமலைக்கு செல்வதற்காக அலிபிரி சோதனைச்சாவடியில் காத்திருந்த பக்தர்கள்.
Published on

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று சர்வ தரிசன டோக்கன் இல்லாமல் சென்ற பக்தர்கள் சுமார் 30 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

ஏழுமலையான் கோவில்

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் முகரம் பண்டிகை மற்றும் சனிக்கிழமை. ஞாயிற்றுக்கிழமை என 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் வைகுண்டம் காத்திருப்பு அறைகள் அனைத்து நிரம்பியதால் தரிசன வரிசையில் இருந்து கோகற்பம் அணை வட்டச்சாலை அருகில் உள்ள ஆக்டோபஸ் கட்டிடம் வெளியே வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

30 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

பக்தர்களின் வருகைக்கு ஏற்ற தங்கும் அறைகள் கிடைக்காததால் அங்குள்ள பூங்காக்கள், சாலையோரம், மண்டபங்களில் பக்தர்கள் தங்கினர். மேலும் அலிபிரி சோதனைச்சாவடியில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நேற்றும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக அதிகரித்தது. ஆக்டோபஸ் கட்டிடம் தாண்டி நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பாட்டா கங்கம்மா கோவிலுக்கு வெளியே வரை பக்தர்களின் வரிசை நீண்டிருந்தது. சர்வதரிசன டோக்கன் பெறாமல் நேரடியாக இலவச தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் சுமார் 30 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாள் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

ரூ.3.76 கோடி காணிக்கை

நேற்று திருப்பதி ஏழுமலையானை 85 ஆயிரத்து 582 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 44 ஆயிரத்து 155 பக்தர்கள தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.3 கோடியே 76 லட்சம் கிடைத்தது. 4 லட்சத்து 66 ஆயிரம் லட்டுகள் விற்பனையாகின. 3 லட்சத்து 43 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட்டது. 3,583 பேர் மருத்துவ சேவையை பயன்படுத்தினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com