

மதுரை,
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, மார்கழி, மாசி மாத திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. அதிலும் சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்ற திருவிழாவாகும். விழாவின் முக்கிய நிகழ்வுகளான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் மற்றும் அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தை காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரைக்கு வருகை தருவார்கள். இதனால் மதுரை மாநகரம் முழுவதும் உற்சாகம் களைகட்டும்.
அவ்வகையில் இந்த ஆண்டின் சித்திரை பெருவிழா இன்று (19-ந் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர், பிரியாவிடையுடன் சுவாமி சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தின் முன்பு எழுந்தருளினார். சிறப்பு பூஜைக்குப் பின்னர், காலை 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் மிதுன லக்னத்தில், தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
விழா நாட்களில் மீனாட்சி-சுந்தரேசுவரர் காலை, இரவில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 26-ந் தேதி மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் இரவு 7.05 மணி முதல் 7.29 மணிக்குள் நடக்கிறது. 27 ந் தேதி திக்கு விஜயம் நடைபெறுகிறது.
சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் 28-ந் தேதி நடக்கிறது. 29-ந் தேதி மாசி வீதிகளில் தேரோட்டம் நடைபெறுகிறது.
அதை தொடர்ந்து கள்ளழகர் கோவில் திருவிழா தொடங்குகிறது. விழாவில் 30-ந் தேதி கள்ளழகர் எதிர்சேவை நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் மே 1-ந் தேதி நடக்கிறது.
திருக்கல்யாணத்திற்கான ரூ.200, ரூ.500 கட்டணச்சீட்டுகள் முன்பதிவு செய்யும் வசதி கோவில் இணையதளமான maduraimeenakshi.hrce.tn.gov.in மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணையதளமான hrce.tn.gov.in ஆகியவற்றில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இன்று முதல் 22-ந்தேதி இரவு 9 மணி வரை கட்டணச் சீட்டுகளை முன்பதிவு செய்யலாம். கோவிலுக்கு சொந்தமான யாத்ரிநிவாஸ் தங்கும் விடுதிக்கு நேரில் சென்றும் கட்டண சீட்டை பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் எண்ணிக்கையில் முன்பதிவு செய்திருந்தால் குலுக்கல் முறையில் தேர்வு செய்து அலைபேசி, இ-மெயிலில் 23-ந்தேதி அன்று தகவல் தெரிவிக்கப்படும்.
பக்தர்கள் 24-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை எல்லீஸ்நகரில் அமைந்துள்ள யாத்ரி நிவாஸ் தங்கும் விடுதியில், தங்களுக்கு வந்த எஸ்.எம்.எஸ்., இ-மெயிலை காண்பித்து பணம் செலுத்தி திருக்கல்யாண கட்டண சீட்டை பெறலாம்.
தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் சித்திரை வீதிகளில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.