மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கிய கள்ளழகர்

அழகர் வைகை ஆற்றில் இறங்குவதைக் காண பல லட்சம் பக்தர்கள் மதுரை மாநகரில் குவிந்திருந்தனர்.
மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கிய கள்ளழகர்
Published on

மதுரை,

மதுரை மாநகரில் நடைபெறும் சித்திரை திருவிழா வரலாற்று சிறப்பு பெற்றதாகும். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலையும், மதுரை அருகே உள்ள அழகர்கோவிலையும் இணைத்து இந்த விழா நடக்கிறது. சைவமும், வைணவமும் ஒருங்கிணைந்த பெருவிழாவாக இந்த திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த சிறப்புமிக்க திருவிழா கடந்த மாதம் 19-ந்தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அழகர்கோவில் சார்பில் தல்லாகுளம் பெருமாள் கோவிலில் கடந்த 17-ந் தேதி முகூர்த்தக்கால் நடுதலுடன் ஆரம்பமானது. கடந்த 28-ந் தேதி மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.

இதற்கிடையே அழகர்மலையில் இருந்து சுந்தரராஜப்பெருமாள், கள்ளழகராக வேடம் பூண்டு தங்கப்பல்லக்கில் 29-ந்தேதி மாலை மதுரைக்கு புறப்பட்டார். கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் கைத்தடி, நேரிக் கம்பு ஏந்தி வந்த கள்ளழகரை வழிநெடுக பக்தர்கள் திரண்டு தரிசித்தனர். பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, கடச்சனேந்தல் வழியாக 30-ந்தேதி காலை 6 மணி அளவில் மதுரையை அடுத்த மூன்றுமாவடிக்கு வந்து சேர்ந்தார்.

அங்கு கள்ளழகரை வரவேற்கும் எதிர்சேவை நடந்தது. அழகர்வேடம் அணிந்த பக்தர்கள், தோல் பைகளில் இருந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து, அழகரை வர்ணித்து பாட்டுப்பாடி அதிர்வேட்டுகள் முழங்க எதிர்கொண்டு வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து புதூர், டி.ஆர்.ஓ. காலனி, ரிசர்வ்லைன், ரேஸ் கோர்ஸ், அவுட்போஸ்ட், வழியாக வழிநெடுகிலும் அமைக்கப்பட்டு இருந்த மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளினார். வீதி எங்கும் பக்தர்கள் குவிந்து தரிசித்தனர்.

அன்று நள்ளிரவில் தங்கக்குதிரை வாகனத்தில் அழகர் எழுந்தருளினார். ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மலர் மாலையை அணிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலுக்கு வந்து, தங்கக்குதிரையில் அமர்ந்தபடி ஆயிரம் பொன்சப்பரத்தில் காட்சி தந்தார். அதன்பின் வைகை ஆற்றில் எழுந்தருள புறப்பட்ட கள்ளழகர், நேற்று காலை 5.35 மணியளவில் வைகை ஆற்றில் இறங்கினார்.

தொடர்ந்து, காலை 7.25 மணி வரை கள்ளழகர் வைகை ஆற்றில் பக்தர்களுக்கு காட்சி அருளினார். இதனைக் காண மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம். தேனி மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் மதுரை மாநகரில் குவிந்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் சர்க்கரை தீபம் ஏற்றி அவரை வழிபட்டனர்.

இதனையடுத்து, இன்று காலை சேஷ வாகனத்தில் எழுந்தருளி தேனுார் மண்டபத்திற்கு கள்ளழகர் புறப்பட்டு சென்றார். மதியம் அங்கிருந்து கருட வாகனத்தில் மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் வழங்கி காட்சி தந்தருளினார். இதை ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர். தொடர்ந்து, இரவு 10 மணி முதல் ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார நிகழ்ச்சி நடக்கிறது.

நாளை காலை 6 மணிக்கு கள்ளழகர் மோகினி அவதாரத்துடன் திருமஞ்சனமாகி, மதியம் அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க அலங்காரத்தில் காட்சி தருகிறார். இரவு ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனம் நடக்கிறது. மே 4 அதிகாலை பூப்பல்லக்கில் அழகர்கோவில் புறப்படுகிறார். வழிநெடுகிலும் மண்டகப்படிகளில் எழுந்தருளும் அழகர், மே 5 காலை 10.40 மணிக்கு மேல் 11.10 மணிக்குள் இருப்பிடம் சேருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com