மதுரை சித்திரை திருவிழா: மீனாட்சி அம்மனுக்கு இன்று பட்டாபிஷேகம்

மீனாட்சி அம்மனுக்கு ராயர் கிரீடம் சூட்டி, நவரத்தினத்தால் ஆன செங்கோலை வழங்கி பட்டத்து அரசியாக பட்டாபிஷேகம் சூடப்படுகிறது.
மதுரை சித்திரை திருவிழா: மீனாட்சி அம்மனுக்கு இன்று பட்டாபிஷேகம்
Published on

மதுரை,

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேக விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றைய தினத்தில் இருந்து மீனாட்சி-சுந்தரேசுவரர் சுவாமிகள் காலை, இரவு என இருவேளையும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருகிறார்கள்.

விழாவின் 7-ம் நாளான நேற்று நந்திகேசுவரர் வாகனத்திலும் சுந்தரேசுவரர் பிரியாவிடையுடனும், யாளி வாகனத்தில் மீனாட்சி அம்மனும் எழுந்தருளினர். பின்னர் அவர்கள் மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

இந்நிலையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் சூடும் விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி இன்று இரவு 7.05 மணிக்கு மேல் 7.29 மணிக்குள் அம்மன் சன்னதியில் உள்ள 6 கால் பீடத்தில் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.

அப்போது மீனாட்சி அம்மனுக்கு ராயர் கிரீடம் சூட்டி, நவரத்தினத்தால் ஆன செங்கோலை வழங்கி பட்டத்து அரசியாக பட்டாபிஷேகம் சூடப்படும். அதில் மீனாட்சி அம்மனிடம் இருந்து செங்கோல், அம்மன் பிரதிநிதியான மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜனிடம் வழங்கப்படும். அவர் செங்கோலை பெற்று கொண்டு சுவாமி சன்னதி 2-ம் பிரகாரம் வழியாக வலம் வந்து மீண்டும் மீனாட்சி அம்மனிடம் செங்கோலை ஒப்படைப்பார். பின்னர் மீனாட்சி அம்மன் பட்டத்து அரசியாக வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி 4 மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

மறுநாளான நாளை (திங்கட்கிழமை) எட்டு திக்கிலும் தேவர்களை வென்று கடைசியாக சிவபெருமானாகிய சுந்தரேசுவரரை போருக்கு அழைத்து போர் புரியும் திக்கு விஜயம் நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. 29-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. திருக்கல்யாணம், தேரோட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com