

மதுரை,
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, மார்கழி, மாசி மாத திருவிழாக்கள் பிரசித்தி பெற்றவை. அதிலும் சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்ற திருவிழாவாகும்.
இந்த நிலையில் சித்திரை பெருவிழா இன்று (19-ந் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. காலை 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள்சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. விழா நாட்களில் மீனாட்சி-சுந்தரேசுவரர் காலை, இரவில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில வலம் வருவர். 26-ந் தேதி முக்கிய நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் இரவு 7.05 மணி முதல் 7.29 மணிக்குள் நடக்கிறது. 27 ந் தேதி திக்கு விஜயமும் நடைபெறுகிறது.
சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் வைபவம் 28-ந் தேதி நடக்கிறது. 29-ந் தேதி மாசி வீதிகளில் தேரோட்டம் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து கள்ளழகர் கோவில் திருவிழா தொடங்குகிறது. விழாவில் 30-ந் தேதி கள்ளழகர் எதிர்சேவையும், முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுதல் மே 1-ந் தேதியும் நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகங்கள் சார்பில் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன.
தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் சித்திரை வீதிகளில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. திருக்கல்யாணம் நடைபெறும் பகுதியான வடக்கு, மேற்கு ஆடி வீதியில் பந்தல் அமைக்கும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. விழா நாட்களில் சுவாமி, அம்மன் மாசி வீதிகளில் வலம் வருவதால் விட்டவாசல், அம்மன் சன்னதி தெரு, நான்கு மாசி வீதிகளிலும் போடப்படும் பந்தல்களை சுவாமி வாகனங்கள் தட்டாதவாறு 30 அடி உயரத்திற்கு மேல் அமைத்து கொள்ள வேண்டும். மேலும் வேப்பிலைத் தோரணங்களையும் அவ்வாறு அமைக்கும் வியாபாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.