மகா மேளா.. திரிவேணி சங்கமத்தில் புனித நீராட குவிந்த பக்தர்கள்
பிரயாக்ராஜில் உள்ள கங்கை நதி மற்றும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் வருடத்திற்கு ஒருமுறை நிகழும் மகா மேளா கடந்த 3-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. அன்று முதல் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரிவேணி சங்கமத்திலும், கங்கை நதியிலும் புனித நீராடுகின்றனர். நதிக்கரையில் தங்கி விரதம் இருக்கும் பக்தர்களான கல்பவாசிகளும் தினமும் புனித நீராடி தங்கள் பூஜையை தொடர்கின்றனர்.
மகா மேளாவை முன்னிட்டு உத்தர பிரதேச அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. மகா மேளா நடைபெறும் இடத்தில் 10,000 சதுர அடி பரப்பளவில் 10 நீராடும் படித்துறைகள், ஒன்பது மிதவைப் பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் மகர சங்கராந்தி கொண்டாட்டங்கள் களைகட்டி உள்ள நிலையில் இன்று பிரயாக்ராஜில் உள்ள கங்கை நதி மற்றும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலையில் 9 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடினர்.

மகா மேளாவுக்கான போலீஸ் சூப்பிரெண்டு நீரஜ் பாண்டே இதுபற்றி கூறுகையில், “காலை 6 மணிக்குள், ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கங்கை நதியிலும் சங்கமத்திலும் நீராடினர். இன்று மாலைக்குள் புனித நீராடும் பக்தர்களின் எண்ணிக்கை ஒரு கோடி முதல் ஒன்றரை கோடி வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.
பக்தர்களின் வருகை அதிக அளவில் இருப்பதால், அவர்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, மேளா நடைபெறும் பகுதி முழுவதும் 10,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிப்ரவரி 15-ம் தேதி வரை மொத்தம் 44 நாட்கள் மகா மேளா நடைபெறுகிறது. இதில் ஜனவரி 15 (மகர சங்கராந்தி), ஜனவரி 18 (மௌனி அமாவாசை), ஜனவரி 23 (வசந்த பஞ்சமி), பிப்ரவரி 1 (மாகி பூர்ணிமா) மற்றும் பிப்ரவரி 15 (மகா சிவராத்திரி) ஆகியவை இந்த மகா மேளாவில் புனித நீராடலுக்கான முக்கிய தினங்கள் ஆகும்.








