

சென்னை:
சிவபெருமானுக்குரிய முக்கிய விழாக்களில் மகா சிவராத்திரி முக்கியமானது. அந்த வகையில் இந்த ஆண்டு மகா சிவராத்திரி விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
சென்னை மற்றும் புறநகரில் உள்ள சிவாலயங்கள் சிறப்பு மின்விளக்கு அலங்காரங்களுடன் களை கட்டியது. காலை முதலே கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் மற்றும் புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரியையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கோவிலுக்கு வெளியே பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் மேற்கொள்வதற்காக தடுப்புகளால் ஆன பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன.
இரவு முழுவதும் விடிய, விடிய சிறப்பு அபிஷேகங்கள், ருத்ர பாராயணம், பக்தி நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சிவனை தரிசித்தனர். பக்தர்கள் வழங்கிய பால், தயிர், தேன், நெய், சர்க்கரை, கரும்புச் சாறு, இளநீர், சந்தனம் விபூதிகளை கொண்டு பூஜைகள் நடந்தன.
புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோவில் பிரகாரத்தில் உள்ள சிவலிங்கத்திற்கு பக்தர்கள் பாலாபிஷேகம் செய்து, வழிபட்டனர். சிவ பாடல்களை பாடி, மகிழ்ந்தனர். ஒவ்வொரு கால பூஜை முடிந்ததும் சிவபெருமானுக்கு தீபாராதனை கட்டப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோல் சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றம் அருகே உள்ள இஷ்டலிங்கலீஸ்வரர் கோவில், வடபழனி முருகன் கோவிலில் உள்ள சிவன் சன்னதி, கோயம்பேடு, பாடி சிவன் கோவில், வேளச்சேரி தண்டீஸ்வரர், சைதாப்பேட்டை காரணீஸ்வரர், அனகாபுத்தூர் அகத்தீஸ்வரர், அடையாறு சிவன் கோவில் என அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஞாயிறு சிவன் கோவில், புழல் திருமூலநாதர், செங்குன்றம் விளாங்காடுபாக்கம் லவபுரீஸ்வரர், அழிஞ்சிவாக்கம் கங்காதீஸ்வரர் கோவிலில் நடந்த பூஜையில் பக்தர்கள் பெருந்திரளாக பங்கேற்றனர்.