திருச்செந்தூர் கோவிலில் மாசி திருவிழா.. கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது

திருச்செந்தூர் கோவிலில் மாசி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் கோவிலில் மாசி திருவிழா.. கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது
Published on

திருச்செந்தூர்,

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், இந்த ஆண்டிற்கான மாசித் திருவிழா இன்று (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் மிக விமர்சையாகத் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

முன்னதாக கொடி மரத்திற்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து, மற்ற கால பூஜைகள் தொடரும்.

திருச்செந்தூர் கோவிலில் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விடுமுறை நாட்கள், திருவிழா காலங்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கிய மாசித் திருவிழா மார்ச் மாதம் 4-ந் தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது. 2-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.

விழா நாட்களில் சுவாமி, அம்பாள் காலை மற்றும் மாலையில் ஒவ்வொரு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர்.

முன்னதாக மாசித் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று மாலை கொடிப்பட்டம் வீதி உலா நடந்தது. இதையொட்டி திருச்செந்தூர் வடக்கு ரதவீதியில் உள்ள 14 ஊர் செங்குந்தர் 12-ம் திருவிழா மண்டபத்தில் சிதம்பர தாண்டவ விநாயகருக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து கொடிப்பட்டத்துக்கும் சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் அரிகரசுப்பிரமணி அய்யர், யானை மீது அமர்ந்து பிடித்தவாறு கொடிப்பட்டம் 8 வீதிகளிலும் ஊர்வலமாக வந்தது.

நிகழ்ச்சியில், கோவில் கண்காணிப்பாளர் ராமமூர்த்தி, பேஷ்கார் ரமேஷ். 14 ஊர் செங்குந்தர் உறவின்முறை அபிவிருத்தி சங்க நாட்டுத்தலைவர் பழனிச்சாமி, சங்கத்தலைவர் பாலகிருஷ்ணன், பொதுச்செயலாளர் பால சுப்பிரமணியன், பொருளாளர் மாரிமுத்து, திரிசுதந்திர கைங்கர்ய சபா தலைவர் ஆனந்த், ஸ்தலஸ்தார் சபை தலைவர் வீரபாகு மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ராமு மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com