

ஸ்ரீவைகுண்டம்,
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வெள்ளூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவகாமி அம்பாள் உடனுறை நடுநக்கர் மத்தியபதீஸ்வரர் என்ற சிவன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 18-ந்தேதி மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் தினமும் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி நடுநக்கர் மத்தியபதீஸ்வரர், சிவகாமி அம்பாள் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சப்பர வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலை 9 மணிக்கு சுவாமி அம்பாளுடன் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேருக்கு எழுந்தருளினார். காலை 10.45 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது.
ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். வீதிகள் வழியாக வலம்வந்த தேர் மதியம் நிலையை வந்தடைந்தது. பின்னர் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இரவு 8.30 மணிக்கு பல்லக்கு வாகனத்தில் சுவாமி - அம்பாள் எழுந்தருளி அருள்பாலித்தனர். தேரோட்டத்திற்கு போலீஸ் துணை சூப்பிரண்டு நரேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8.30 மணிக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. மதியம் சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதிஉலா நடக்கிறது. நாளை முதல் 2 நாட்களுக்கு தெப்ப உற்சவம் நடக்கிறது.