மாசி திருவிழா.. கன்னியாகுமரி முருகன் கோவிலில் காவடி கட்டு விழா

பக்தர்கள் இன்று திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக புறப்பட்டு செல்கிறார்கள்.
காவடி கட்டு விழா
காவடி கட்டு விழா
Published on

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி வடக்கு தெருவில் ப்ரானோபகாரி தர்மமடம் உள்ளது. இங்கு உள்ள முருகன் கோவிலில் 36-ம் ஆண்டு மாசி காவடி கட்டு திருவிழா கடந்த 21-ந்தேதி காவடி பூஜையுடன் தொடங்கியது. இதையொட்டி அன்று அதிகாலையில் கணபதி ஹோமத்தைத் தொடர்ந்து காவடி பூஜையில் வைக்கப்பட்டது. மாலையில் திருவிளக்கு பூஜை நடந்தது.

2-ம்நாள் திருவிழாவையொட்டி காலையில் கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் அபிஷேகப் பால் குடம் எடுத்து மேள தாளம் முழங்க கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு வந்தனர்.

அதைத்தொடர்ந்து கலச பூஜை, அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர் அன்னதானம் நடந்தது. மாலையில் காவடி ஊர்வலம் நடைபெற்றது. பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பன்னீர் காவடியை பக்தர்கள் மேளதாளம் முழங்க விடிய-விடிய வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.

4-ம் திருவிழாவான இன்று மாலை 4 மணிக்கு பக்தர்கள் காவடியுடன் திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக புறப்பட்டு செல்கின்றனர். இந்த பாதயாத்திரை அஞ்சுகிராமம், கூட்டப்புளி, கூடங்குளம், நவ்வலடி, திசையன்விளை, தட்டார்மடம், மணிநகர், உடன்குடி, தருவைகுளம் வழியாக வருகிற 27-ந்தேதி காலை திருச்செந்தூர் சென்றடைகிறது. அன்று காலை திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமிக்கு பன்னீர் அபிஷேகம் நடக்கிறது. மறுநாள் பச்சை சாத்து நிகழ்ச்சி முடிந்து மாலை 4 மணிக்கு காவடியுடன் பக்தர்கள் கன்னியாகுமரி நோக்கி புறப்படுகிறார்கள்.

மார்ச்2-ந்தேதி காலை 9 மணிக்கு காவடி கன்னியாகுமரி வடக்கு தெருவில் உள்ள ப்ரானோபகாரி மடத்தில் உள்ள முருகன் கோவிலை வந்தடைகிறது. அங்கு இரவு 7 மணிக்கு இடும்பன் பூஜை நடைபெறுகிறது. 8 மணிக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி வடக்குத்தெரு ப்ரானோபகாரி தர்ம மடம் அறக்கட்டளையினர் செய்து வருகிறார்கள்.

Also Read
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் மாசி திருவிழா தொடங்கியது
காவடி கட்டு விழா

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com