

திருச்செந்தூர்,
முருகபெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
9-ம் திருநாளான நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. காலையில் மேலக்கோவிலில் இருந்து சுவாமி அலைவாயுகந்த பெருமானும், குமரவிடங்க பெருமானும் தனித்தனி வெள்ளி குதிரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
இந்த நிலையில், மாசித் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருநாள் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. பின்னர் காலை 7 மணிக்கு விநாயகர் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.
தொடர்ந்து வள்ளி-தெய்வானையுடன் சுவாமி குமரவிடங்கப் பெருமான் எழுந்தருளிய பெரிய தேரை பக்தர்கள் 'வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா’ என முழக்கமிட்டபடி வடம் பிடித்து தேரை இழுத்தனர். வெளி வீதி நான்கிலும் சுவாமி பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேரோட்டத்தையொட்டி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கோவிலுக்கு அதிகளவில் குவிந்தவண்ணம் உள்ளனர்.