மாசிமக விழா... கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் தேரோட்டம்

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
ஆதிகும்பேஸ்வரர் கோவில் தேரோட்டம்
ஆதிகும்பேஸ்வரர் கோவில் தேரோட்டம்
Published on

கும்பகோணம்:

கும்பகோணத்தில் உள்ள 12 சிவன் கோவில்களும், 5 வைணவ கோவில்களும் மகாமக விழாவுடன் தொடர்புடைய கோவில்கள் ஆகும். இதில் ஆதிகும்பேஸ்வரர் கோவிலை ஆதாரமாக கொண்டு ஆண்டு தோறும் நடக்கும் மாசி மக விழாவும், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா மக விழாவும் நடக்கிறது.

அவ்வகையில் இந்த ஆண்டுக்கான மாசிமக திருவிழா ஆதிகும்பேஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோவில்கள் மற்றும் பெருமாள் கோவில்களில் கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா நடந்து வருகிறது. கடந்த 25-ந் தேதி இரவு அந்தந்த கோவில் உற்சவ சுவாமியும், அம்பாளும் ரிஷப வாகனத்தில் ஓலைச்சப்பரத்தில் வீதிஉலாவாக வந்தனர்.

இதேபோல் சக்கரபாணி, ராஜகோபாலசுவாமி, ஆதிவராகபெருமாள் கோவில்களின் 4-வது நாள் விழாவில் இரவு பெருமாள், தாயாரோடு கருட வாகனத்தில் ஓலைச்சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆதிகும்பேஸ்வரர் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் விநாயகர், சுப்பிரமணியர், சாமி, அம்மன் ஆகிய 4 தேர்களும் 4 வீதிகளிலும் உலா வந்தன. அதிகாலை விநாயகர், சுப்ரமணியர் தேர் வடம் பிடிக்கப்பட்டது. சாமி தேர் 4 வீதிகளையும் சுற்றி வந்த பின்னர் அம்பாள் தேர் வடம் பிடிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களிலும் தேரோட்டம் நடக்கிறது.

அதேபோல் ஆதிகும்பேஸ்வரர் கோவில் சண்டிகேஸ்வரர் தேரோட்டமும் நடக்கிறது. நாளை(திங்கட்கிழமை) காலை முதல் அனைத்து சிவன் கோவில்களில் இருந்தும் சுவாமி, அம்மன், பஞ்ச மூர்த்திகள் ஆகியோர் வீதி உலா புறப்பட்டு மகாமக குளக்கரையில் எழுந்தருளுவார்கள். அபிஷேகம் ஆராதனைக்கு பிறகு மதியம் 12 மணி முதல் 12. 30 மணிக்குள் தீர்த்தவாரி நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com