மாசி மகா சிவராத்திரி திருவிழா: நாளை இரவு முழுவதும் கோவில்களில் சிறப்பு வழிபாடு

மதுரை மீனாட்சி அம்மன், ராமேசுவரம் கோவில்களில் நாளை இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாசி மகா சிவராத்திரி திருவிழா: நாளை இரவு முழுவதும் கோவில்களில் சிறப்பு வழிபாடு
Published on

மதுரை,

மகாசிவராத்திரி

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஜோதிர்லிங்கத் தலம் ஆகும்.

ராமேசுவரம் கோவிலில் இந்த ஆண்டின் மாசி மகாசிவராத்திரி திருவிழா கடந்த 8-ந் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

விழாவின் 7-ம் நாளான இன்று மாலை 4 மணிக்கு மேல் சுவாமி-அம்பாள் தங்க பல்லக்கில் முத்தங்கி அலங்காரத்தில் வீதி உலா வருகிறார்கள். 8-ம் நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9 மணிக்கு வெள்ளி தேரோட்டம் நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 9-வது நாளான வருகிற 16-ந்தேதி அன்று காலை 9 மணிக்கு சுவாமி-அம்பாள் தேரோட்டம் நடக்கிறது. விழாவில் 10-ம் நாளான வருகிற 17-ந் தேதி மாசி அமாவாசையை முன்னிட்டு பகல் 1 மணிக்கு சுவாமி-அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் அக்னி தீர்த்த கடற்கரைக்கு தீர்த்தவாரிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.

நாளை மாசி மகா சிவராத்திரி என்பதால். அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படும் கோவில் நடையானது சாத்தப்படாமல் பகல் மற்றும் இரவு முழு வதும் திறந்திருக்கும். வழக்கமாக கோவில் நடை பகல் 1 மணி மற்றும் இரவு 8 மணிக்கு அடைக்கப்படும். ஆனால் மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு பகல், இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் நாளை இரவு முழுவதும் 6 கால சிறப்பு சிவராத்திரி அபிஷேகம் நடைபெறும். விழாவையொட்டி சுவாமி சன்னதி பிரகாரத்தில் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன.

மதுரையில் சிவராத்திரி விழா

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகாசிவராத்திரி விழா நாளை (15-ந் தேதி) இரவு 10 மணி முதல் மறுநாள் காலை வரை நடக்கிறது. இரவில் 4 கால பூஜைகள் நடைபெறுகிறது. அதன்படி முதல் கால பூஜை இரவு 10 மணிக்கு தொடங்கி 10.40 மணி வரையிலும், 2-ம் கால பூஜை 11 மணிக்கு தொடங்கி 11.40 மணி வரையிலும், 3-ம் கால பூஜை 12 மணிக்கு தொடங்கி 12.40 மணி வரையிலும், 4-ம் கால பூஜை நள்ளிரவு 1 மணிக்கு தொடங்கி 1.40 மணி வரையிலும் அம்மன் சன்னதியில் நடை பெறும்.

அதே போன்று சுவாமி சன்னதியில் முதல் கால பூஜை இரவு 11 மணிக்கு தொடங்கி 11.45 மணி வரையிலும், 2-ம் கால பூஜை இரவு 12 மணிக்கு தொடங்கி 12.45 மணி வரையிலும், 3-ம் கால பூஜை நள்ளிரவு 1 மணிக்கு தொடங்கி 1.45 மணி வரையிலும், 4-ம் கால பூஜை 2 மணிக்கு தொடங்கி 2.45 மணி வரையிலும் நடைபெறும்.

தொடர்ந்து அதிகாலை 3 மணிக்கு அர்த்தசாம பூஜையும், 4 மணிக்கு பள்ளியறை பூஜையும், 5 மணிக்கு திருவனந்தல் பூஜையும் நடக்கிறது.

மகா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் நடைபெறும் 4 கால பூஜை அபிஷேகத்திற்கு தேவையான பால், தயிர், இளநீர், பன்னீர், பழவகை கள், தேன், மஞ்சள் பொடி, எண்ணெய், நெய் மற்றும் இதர அபிஷேக பொருட்களை நாளை மாலைக்குள் மீனாட்சி அம்மன் கோவில் உள் துறை அலுவலகத்திலும், உபகோவில்களிலும் பக்தர்கள் ஒப்படைக்கலாம்.

மேலும் சிவராத்திரி விழாவை சிறப்பிக்கும் வகையில் மீனாட்சி அம்மன் கோவிலில் நாளை மாலை 6 மணி முதல் மறுநாள் அதிகாலை வரை மங்கள இசை, பரதநாட்டியம், பக்தி இன்னிசை, ஆன்மிக சொற் பொழிவு, பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கின்றன என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com