மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்: திருப்பரங்குன்றத்தில் இருந்து முருகப்பெருமான் நாளை மதுரைக்கு புறப்பாடு

நாளை மறுநாள் மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரருக்கு திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற உள்ளது.
மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்: திருப்பரங்குன்றத்தில் இருந்து முருகப்பெருமான் நாளை மதுரைக்கு புறப்பாடு
Published on

திருப்பரங்குன்றம்,

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை,மார்கழி, மாசி ஆகிய மாதங்களில் நடைபெறும் திருவிழாக்கள் பிரசித்தி பெற்றவை. அதிலும் சித்திரை திருவிழா உலகப்புகழ்பெற்ற திருவிழாவாகும்.

இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றைய தினத்தில் இருந்து மீனாட்சி-சுந்தரேசுவரர் சுவாமிகள் காலை, இரவு என இருவேளையும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருகிறார்கள். சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் சூடும் விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரருக்கு திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை (திங்கட்கிழமை) மாலை 5 மணி அளவில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து பவளக்கனிவாய் பெருமாள் தனது கையில் கென்னடி சுமந்தபடி மதுரைக்கு புறப்பட்டு செல்லுகிறார்.

அதேபோல தனது தாய் தந்தையரின் திருமணத்தில் பங்கேற்க தெய்வானையுடன், முருகப்பெருமானும் மதுரைக்கு புறப்படுகிறார். திருப்பரங்குன்றத்தில் இருந்து மதுரை வரை சுமார் 125-க்கும் மேற்பட்ட திருக்கண்களில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடக்கும் திருக்கல்யாண வைபவத்தில் பவளக்கனிவாய் பெருமாள் தனது தங்கையான மீனாட்சி அம்மனை, சுந்தரேசுவரருக்கு தாரை வார்த்து கொடுத்து திருக்கல்யாணத்தை நடத்தி வைக்கிறார். இந்த திருக்கல்யாண வைபவத்தில் திருப்பரங்குன்றம் முருகப்பெருமானும் தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

4 நாட்கள் மதுரையில் தங்கிவிட்டு மே 2-ந்தேதி மாலை 5 மணி அளவில் பூப்பல்லக்கில் தெய்வானையுடன் முருகப்பெருமானும், சிம்மாசனத்தில் பவளக்கனிவாய் பெருமாளும் மதுரையில் இருந்து புறப்பட்டு தங்களது இருப்பிடமான திருப்பரங்குன்றத்திற்கு வருகின்றனர். வரும் வழிநெடுகிலும் திருக்கண்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தப்படி கோவிலுக்கு வந்து சேருகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com