ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர்.. கோவை புலியகுளம் "முந்தி விநாயகர்" கோவில் சிறப்புகள்!

தமிழகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் கோவை முந்தி விநாயகர் கோவிலுக்கு வருகை தந்து மனமுருகி வேண்டிக் கொள்கிறார்கள்.
தமிழகத்தின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோயம்புத்தூரில் காண்போரை வியக்க வைக்கும் விநாயகர் கோவில் அமைந்துள்ளளது. அதுதான் புலியகுளம் பகுதியில் உள்ள முந்தி விநாயகர் கோவில். இந்தக் கோவிலின் தனித்துவமான சிறப்புகளை பார்ப்போம்.
இந்த கோவிலின் மூலவர் சிலை சுமார் 190 டன் எடையுள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் சிலை இதுதான். 19 அடியில் உயர்ந்து நிற்கும் இவரைப் பார்க்கும் போதே ஒருவித சிலிர்ப்பு ஏற்படும்.
கலைநயமிக்க திருவுருவம்:
விநாயகரின் நெற்றி மட்டுமே 2 அடி அகலம் கொண்டது. இவரது துதிக்கை வலம்சுழியாக அமைந்து, அதன் நுனியில் அமிர்த கலசத்தை ஏந்தியுள்ளார். இது செல்வம் பெருகும் என்பதைக் குறிக்கிறது.
தனது நான்கு கரங்களில் உடைந்த தந்தம், பாசக்கயிறு, அங்குசம் மற்றும் ஒரு பலாப்பழத்தை ஏந்தி அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். இவரது இடது பாதத்தில் 'மகாபத்மம்' எனும் அபூர்வ ரேகை உள்ளது மற்றொரு சிறப்பு.
வேண்டுதல்களை நிறைவேற்றும் நாயகன்: "முந்தி விநாயகர்" என்ற பெயருக்கேற்ப பக்தர்கள் தொடங்கும் எந்த ஒரு நல்ல காரியத்திற்கும் முந்திக் கொண்டு வந்து அருள்பவர். திருமணத் தடை நீங்க, குழந்தை பாக்கியம் பெற, தொழில் நஷ்டம் நீங்கி லாபம் பெற என பல்வேறு வேண்டுதல்களை முன்வைத்து, தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து மனமுருகி வேண்டிக் கொள்கிறார்கள்.
காய்கனி அலங்காரமும் திருவிழாவும்: சித்திரை மாத தமிழ்ப் புத்தாண்டு அன்று, சுமார் 5 டன் எடையுள்ள மா, பலா, வாழை உள்ளிட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளால் விநாயகருக்கு அலங்காரம் செய்யப்படும். அதேபோல் விநாயகர் சதுர்த்தி அன்று 3 டன் பூக்களால் தொடுக்கப்பட்ட மாலையை அணிந்து 'ராஜ அலங்காரத்தில்' இவர் காட்சியளிப்பார்.
இக்கோவில் காலை 5.30 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.






