

பரமத்தி வேலூர்,
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா ஆனங்கூர் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு கடந்த 21ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்தக் குடங்களுகளுடன் கோவிலை வந்தடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து தினமும் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை வடிசோறு நிகழ்ச்சியும், நேற்று செவ்வாய்க்கிழமை காப்பு கட்டி பண்டாரம் அக்னி சட்டி எடுத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இன்று புதன்கிழமை சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்த குடம் மற்றும் பால்குடங்களை சுமந்தபடி ஊர்வலமாக வந்தனர். இந்த ஊர்வலம் மேள தாளங்கள் முழங்க செல்லாண்டியம்மன் கோவிலை வந்தடைந்தது. அங்கு செல்லாண்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆனங்கூர் பகவதி அம்மன் கோவில், காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதன் பின்னர் பால்குடம் மற்றும் தீர்த்தக் குட ஊர்வலம் மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது. அங்கு, பக்தர்கள் கொண்டு வந்த பால்குடம் மற்றும் தீர்த்த குடங்களில் கொண்டு வந்த பால் மற்றும் தீர்த்தத்தால் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாரியம்மனுக்கு பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனர் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இன்று மாலை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மன் முன் படையல் போட்டு பொங்கல் பூஜை செய்கின்றனர். அதனைத் தொடர்ந்து இரவு சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் மாவிளக்கு கொண்டு வந்து மாவிளக்கு பூஜை செய்கின்றனர். இரவு வாணவேடிக்கை நடைபெறுகிறது.
நாளை வியாழக்கிழமை கம்பம் பிடுங்கி காவேரி ஆற்றில் விடும் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும், மாலை மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.