

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலுார் தாலுகா, சோளசிராமணி அருகே தேவம்பாளையம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற லிங்கபைரவி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மாசித் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
திருவிழாவை முன்னிட்டு கடந்த 9ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து கடல் நீர் தீர்த்த குடம் எடுத்து வந்து லிங்கபைரவி அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. 10ஆம் தேதி கொடியேற்றம், காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
நேற்று காலை 11.00 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து லிங்கபைரவி அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து லிங்கபைரவி அம்மனுக்கு மேள தாளங்கள் முழங்க தீபாராதனை காட்டப்பட்டது. சிறப்பு பூஜைக்கு பிறகு, கொதிக்கும் எண்ணைய்யை எடுத்து பூசாரி வேப்பிலை மூலம் பக்தர்கள் மீது தெளித்து ஆசி வழங்கினார்.
விழாவில் நாமக்கல், ஈரோடு, கரூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.