நவராத்திரி 4-ம் நாள்: வெள்ளி காமதேனு வாகனத்தில் பவனி வந்த கன்னியாகுமரி பகவதி அம்மன்

நவராத்திரி 4-ம் நாள் திருவிழாவையொட்டி வெள்ளிக் காமதேனு வாகனத்தில் கன்னியாகுமரி பகவதி அம்மன் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
உலகப் புகழ்பெற்ற கோவில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா கடந்த 23-ந்தேதி தொடங்கியது. 4-ம் திருவிழாவான நேற்று மாலையில் ஆன்மீக உரையும் இரவு பக்தி இன்னிசை கச்சேரியும் நடந்தது. அதன்பிறகு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக் காமதேனு வாகனத்தில் பகவதி அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளிபிரகாரத்தைச் சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை பவனிவந்த நிகழ்ச்சி நடந்தது.
கோவிலின் கிழக்கு பக்கம் உள்ள அலங்கார மண்டபத்தில் இருந்து புறப்பட்ட அம்மனின் வாகனம், 3-வது முறை பவனி வரும்போது ஓதுவார்களின் அபிராமி அந்தாதி மற்றும் தேவார பாடல் பாடினர். கோவிலின் மேற்கு பக்கம் உள்ள வெளிப் பிரகார மண்டபத்தில் அம்மன் எழுந்தருளி இருந்த வெள்ளி கலைமான் வாகனத்தை மூங்கில் தண்டையத்தில் அமர வைத்து தீபாராதனை காட்டப்பட்டது. அதன்பிறகு இறுதியாக தாலாட்டு பாடலுடன் கூடிய நாதஸ்வர இசையுடன் அம்மனின் வாகன பவனி நிறைவடைந்தது.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., மாவட்ட அ.தி.மு.க. துணை செயலாளர் சுகுமாரன், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் தாமரை தினேஷ், பா.ஜ.க. மாவட்ட செயலாளர் சி.எஸ்.சுபாஷ், கொட்டாரம் பேரூர் தி.மு.க. செயலாளரும் குமரி பகவதி அம்மன் பக்தர்கள் நற்பணி சங்க செயலாளருமான வைகுண்டபெருமாள், தே.மு.தி.க. சமூக வலைதள அணி மாநில துணை செயலாளர் வக்கீல் சிவகுமார் நாகப்பன், மாநில பா.ஜ.க. செயலாளர் ஜெயராம், மாவட்ட அ.தி.மு.க. வர்த்தகர் அணி பொருளாளர் பகவதியப்பன், அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் ஹரிபூபதி, கன்னியாகுமரி பகவதி அம்மன் பக்தர்கள் சங்க செயலாளர் முருகன் உள்பட திரளான பக்தர்களும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் கலந்து கொண்டனர்.
நிறைவாக கோவிலில் அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும் அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாராதனையும் நடந்தது.
5-ம்திருவிழாவான இன்று அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் அதைத் தொடர்ந்து காலை 11.30 மணிக்கு அம்மனுக்கு தங்க கிரீடம் வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் மற்றும் சந்தனக்காப்பு அலங்காரத்துடன் தீபாராதனையும் அதைத்தொடர்ந்து சிறப்பு அன்னதானமும் நடந்தது.
மாலையில் சாயரட்சை தீபாராதனையும் இரவு 9 மணிக்கு வெள்ளிக் காமதேனு வாகனத்தில் பகவதி அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளி பிரகாரத்தை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
அம்மன் வெள்ளி காமதேனு வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி பவனி வரும் போது இலங்கையை சேர்ந்த அறங்காவலர் டாக்டர் செந்தில்வேள் கூடை -கூடையாக தாமரை மரிக்கொழுந்து, கொழுந்து, பிச்சி, முல்லை, ரோஜா உள்பட பல வண்ண மலர்களை தூவி வழிபடும் நிகழ்ச்சி நடக்கிறது.






