நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா: சுவாமி தேருக்கு புதிய வடம் பொருத்தும் பணி


நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா: சுவாமி தேருக்கு புதிய வடம் பொருத்தும் பணி
x

தேர் இழுப்பதற்காக ரூ.6.5 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 1300 அடி நீளத்தில் புதிய வடம் கயிறு வாங்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆனிப்பெருந்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடக்கும். திருவிழாவின் 9-வது நாளில் சுவாமி, அம்பாள், விநாயகர், சண்முகர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட தேர்கள் பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டு 4 ரத வீதிகளிலும் வலம் வரும்.

இந்த ஆண்டு ஆனிப்பெருந்திருவிழா கொடியேற்றம் வருகிற 30-ந் தேதி நடக்கிறது. வருகிற 8-ந் தேதி வெகு விமரிசையாக தேரோட்டம் நடைபெற உள்ளது.

இந்த தேரோட்ட நிகழ்வில், பெரிய தேரான சுவாமி தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுப்பார்கள். இந்த தேர் 450 டன் எடையும், 82 அடி உயரமும், 28 அடி அகலமும் கொண்டதாகும்.

தற்போது தேரை தயார்படுத்தும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்காக கண்ணாடி இழை கூண்டு அகற்றப்பட்டு சுவாமி தேர் உள்ளிட்ட 5 தேர்களும் தீயணைப்பு வீரர்களால் தண்ணீரை பீச்சி அடித்து சுத்தப்படுத்தப்பட்டது. தொடர்ந்து சாரம் கட்டும் பணி, அலங்கார துணிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அதன் தொடர்ச்சியாக நேற்று சுவாமி தேருக்கு புதிய வடம் பொருத்தும் பணி நடைபெற்றது. கடந்த ஆண்டு தேரோட்டத்தின் போது 4 முறை சுவாமி தேருக்கான வடம் கயிறு அறுந்தது. அதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் அதிருப்தி தெரிவித்தனர். இதன் காரணமாக தற்போது புதிய வடகயிறு வாங்கப்பட்டுள்ளது. ரூ.6.5 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 1300 அடி நீளத்தில் புதிய வடம் கயிறு வாங்கப்பட்டுள்ளது.

அதே நேரம் திருவிழாவுக்கு நாள் நெருங்குவதால் கோவில் முன்பு பந்தல் அமைக்கும் பணியிலும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக மாற்று வழியில் மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களும் இயக்கப்படுகின்றன. இதேபோல் ரத வீதிகளில் செல்லும் பஸ்களும் பாரதியார் தெரு வழியாக இயக்கப்படுகின்றன.

1 More update

Next Story